வியாழன், 21 நவம்பர், 2013

சலாம் கூறுவதின் சிறப்பு

சலாம் கூறுவதின் சிறப்பும்,அதன் பரப்புவதன் அவசியமும்,

இறை விசுவாசிகளே! உங்களின் வீடுகள் அல்லாத{மற்றவர்}வீடுகளில்,
நீங்கள் உள்ளே நுழைய அனுமதி பெற்று,அவர்களுக்கு நீங்கள் சலாம்
கூறும்வரை உள்ளே நுழையாதீர்கள்.{24:27}

நீங்கள் வீடுகளில் நுழைந்தால்,அல்லாஹ்விடமிருந்துள்ள வாழ்த்தாகவும்,
தூய்மையான அபிவிருத்தியாகவும் உள்ள சலாமை உங்களிடையே
கூறிக்கொள்ளுங்கள்[24:61]

ஒரு மனிதர் நபி[ஸல்]அவர்களிடம்"இஸ்லாத்தில் சிறந்தது எது?"என்று கேட்டார்.பசித்தவனுக்கு நீர் உணவளிப்பது,நீர் அறிந்தவர்,அறியாதவர் என அனைவருக்கும்சலாம் கூறுவது"என்று நபி[ஸல்] பதில் கூறினார்கள்.{புகாரி:12.முஸ்லிம்:39}

அல்லாஹ் ஆதம்[அலை]அவர்களைப் படைத்த போது[அவரிடம்]"நீர் சென்று அங்கேஉட்காந்திருக்கின்ற வானவர்களுக்கு சலாம் கூறுவீராக! உமக்கு அவர்கள் கூறும்வாழ்த்துக்களை நீர் கேட்பீர்ராக! நிச்சயமாக அது உமக்குரிய வாழ்த்துகளாகும்.உம வாரிசுகளுக்குரியே வாழ்த்துக்களாகும்."
அஸ்ஸலாமு அழைக்கும்{உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக}
என ஆதம்{அலை}வானவர்களிடம் கூறினார்.உடனே அவர்கள் 
அஸ்ஸலாமு அலைக்க வரஹ்மதுல்லாஹி[உங்கள் மீதும் அல்லாவின் சாந்தியும்,அவனின் கருணையும் உண்டாவதாக}என்று கூறினார்கள்.[புகாரி:3326.முஸ்லிம் :2841]

மனிதர்களே!சலாம் கூறுவதை பரப்புங்கள்.பசித்தவனுக்கு உணவளிங்கள்.
உறவினர்களை ஆதரிங்கள்.மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் 
தொழுங்கள்.சலாம் கூறுவது மூலம் சொர்க்கத்தில் நுழையுங்கள் என்று 
நபி{ஸல்}அவர்கள் கூறினார்கள்.

அஸ்ஸலாமு அழைக்கும் என்று சொன்னால் பத்து  நன்மைகள்,
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ் என்றால் இருபது நன்மைகள்.
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி,வபராகாதுகு என்று சொன்னால் என்று கூறினால் 30 நன்மைகள்.

முஹ்மீனுக்கு  முஹ்மீன் வலைப்பூவில் உங்கள் கருத்தை பகிரும் போது முதலில் சலாத்தை கூறுங்கள்.நாம் சலாத்தை கூறி அதன் பயனை 
பெறுவோமாக!

வெள்ளி, 8 நவம்பர், 2013

அமைதியான உள்ளம்!


உலகத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். நபி (ஸல்) அவர்கள் மீதும் நபித்தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதனமும் உண்டாவதாக!

இஸ்லாமிய சமூகம் நடைமுறை வாழ்விலும் வணக்க வழிபாடுகளிலும் கொள்கைக் கோட்பாட்டிலும் தூய்மையானதாக தனித்து விளங்குகின்றது.
 நபி (ஸல்) அவர்கள் உள்ளத்தை அமைதியின்மையாக்கக் கூடிய்வற்றை விட்டும் பிரிவினையையும் கோபத்தையும் உருவாக்காக் கூடியவற்றை விட்டும் தடுத்திருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


“நீங்கள் ஒருவருக்கொருவர் கோபித்துக் கொள்ள வேண்டாம்; பொறாமை கொள்ள வேண்டாம்; உறவினரை துண்டித்து நடக்க வேண்டாம்; தீமையின்பால் அலோசனை செய்து கொள்ள வேண்டாம், அல்லாஹ்வை வழிப்படக்கூடிய சகோதரர்களாக இருந்து கொள்ளுங்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதரனுடன் மூன்றி நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது ஹராமாகும்” (ஆதாரம்: முஸ்லிம்)


மக்களுக்கு மத்தியில் அன்பையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தக்கூடிய விடயங்களை ஏவியிருக்கின்றார்கள்.


“என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக நீங்கள் விசுவாசம் கொள்ளும் வரை சுவர்க்கம் நுழைமாட்டீர்கள்; மேலும் ஒருவருகொருவர் விரும்பிக் கொள்ளாதவரை விசுவாசம் கொள்ள மாட்டீர்கள்” (ஆதாரம்: முஸ்லிம்)


“நபி (ஸல்) அவர்களிடத்தில் மனிதர்களில் சிறந்தவர் யார்? என்று வினவப்பட்டார். தனது உள்ளத்தில் இருப்பவற்றை அகற்றுபவனும் உண்மை பேசுபவனும் ஆவான் என்றார்கள். அதற்கு நபித்தோழர்கள், ‘உண்மை பேசுபவனை நாம் அறிவோம்; உள்ளத்தில் இருப்பவற்றை அகற்றுபவன் என்றால் யார்?’ என்று கேட்டார்கள். (அதற்கு நபி {ஸல்} அவர்கள்) ‘உள்ளத்தில் இருப்பதை அகற்றுபவர் என்பது இறையச்சமுள்ள பிறருடைய குறைகளை கூறுவதை விட்டும் தூய்மையாக இருப்பவன் ஆவான்; அவனிடம் எந்த பாவமும் கோபமும் குரோதமும் பொறாமையும் இருக்காது.” (ஆதாரம்: இப்னு மாஜா)


அமைதியான உள்ளம் என்பது அல்லாஹ்வின் அளப்பரிய அருட்கொடைகளிலிருந்தும் உள்ளவையாகும். சுவர்க்கவாசிகள் சுவர்க்கம் நுழையும் போது அவர்களுக்கு கொடுக்கப்படக் கூடியவையும் ஆகும்.


அல்லாஹ் கூறுகின்றான்:


“அவர்களின் உள்ளங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கிவிடுவோம். அவர்கள் சகோதரர்களாக கட்டில்களின் மீது ஒருவரை ஒருவர் முன்னோக்கியிருப்பர்.” (அல்குர் ஆன் 15:47)


அமைதியான உள்ளமுடையவர்கள் உலகிலேயே நிம்மதியாக வாழ்வார்கள். மறுமையில் அதனை கனீமத்தாக பொற்றுக் கொள்வார்கள் சுவர்கம் நுழைவதற்கு காரணியாகவும் அமையும்.


இப்னு ஹஸம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:


“சிலர் தப்பான எண்ணங்களை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டு தீய விஷயங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பெரும் பாவங்களை செய்கின்றனர். மறுமையில் நரகிலும் நுழைய கிற்கு வழிகோலுகின்றனர். இதனால் எந்தவித தப்பும் செய்யாத பெரியவர்களையும் சிறியவர்களையும் அழிக்கின்றனர். அவர்களுக்கு சோதனைகளையும் ஏற்படுத்துகின்றனர். இத்தகையவர்கள் இதன் மூலம் தனக்கு எந்த நன்மையும் இல்லை என்பதை அறிந்தால் இத்தகைய தீய செயல்களில் ஈடுபட மாட்டார்கள். இவர்கள் தங்களது எண்ணத்தை தூய்மைப்படுத்தி தீயவற்றை விட்டுவிட்டு நல்ல விஷயங்களை முற்படுத்தி செய்தால் சந்தோஷமானவர்களாக இவ்வுலகில் வாழ்வார்கள்; மறுமையில் சுவர்கத்துக்கும் நுழைவார்கள். ”


தற்காலத்தில் அதிகமானவர்கள் தீய விஷயங்களை பார்ப்பதை விட்டும், ஹராமானவற்றை சாப்பிடுவதை விட்டும் பேணுதலாக இருக்கின்றனர். ஆனாலும் தனது உள்ளத்தினால் பிறரை பொறாமை, மனக்கோபம் போன்றவற்றில் பராமுகமாக இருக்கின்றனர். நான்கு விஷயங்களை நாம் பேணிக்கொள்ள வேண்டும். மனிதனது கண்ணினால் ஆகுமானவற்றை மாத்திரம் பார்வையிட வேண்டும், உள்ளத்தில் பிறரைப் பற்றி பொறாமை, கோபம் இருக்கின்றதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு தீய விஷயங்களை செய்வதனை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும். இத்தகைய நான்கும் ஒருவரிடத்தில் இருந்தால் நிச்சயமாக அவர் அமைதியான உள்ளம் கொண்டவராவார்.
 
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக........

சனி, 12 அக்டோபர், 2013

குர்பானி -விளக்கம்

அஸ்ஸலாமு அழைக்கும்! 
இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படை இறையச்சமாகும்.
நாம் செய்கின்ற நற்காரியங்களில் இறையச்சம் இருந்தால்தான்  அல்லாஹ்விடம் நற்கூலியை பெறமுடியும்.இந்த முக்கியமான அம்சத்தை நினைவூட்டும் விதமாக திகழ்வது குர்பானியாகும்.

நபி இப்ராஹீம்[அலை]அவர்களின் மகன் இஸ்மாயில்[அலை]அவர்களை 
பலியிடுமாறு அல்லாஹ் கனவின் மூலம் இப்ராஹீம்[அலை]அவர்களுக்கு
கட்டளையிட்டான்.அதை நிறை வேற்றிட தன் மகனை அழைத்து பலியிட 
துணிந்தபோது அல்லாஹ் அதை தடுத்து ஒரு ஆட்டைப் பலியிடுமாறு
கட்டளையிட்டான்.

இந்த தியாகத்தை நினைவுகூரும் மற்ற அனைவரும் பிராணியை குர்பானி 
கொடுக்க வேண்டுமென அல்லாஹ் கட்டளையிடுகிறான்.இந்த விவரங்களை குர்ஆன் தெளிவுபடுத்துகிறது[37:101-108]
குர்பானியின் நோக்கம் இறையச்சம் மட்டுமேயாகும்.குர்பானியின் மாமிசமோ,அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை.உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது.[22:37]
உமது  இறைவனை தொழுது குர்பானி கொடுபீராக :[108:2]

உயர்ந்த நோக்கத்திற்காக கடமையாக்கப்பட்ட இந்த குர்பானியை நபி[ஸல்]
தமது வாழ்நாளில் பேணுதலுடன் கொடுத்து வந்துள்ளார்கள்.

எனவே உண்மையான நோக்கத்தை புரிந்துகொண்டு பெருமையோ,வேறு 
காரணங்களோ இல்லாமல் தியாக மனப்பான்மையுடன் அல்லாஹ்வுக்காக 
குர்பானி கொடுக்க வேண்டும்.நாம் மனத்தூமையுடன் செய்கின்ற குர்பானியும் நற்காரியங்களும் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும் மகத்தான நற்கூலியை தரும்.

எவர்களிடம் அன்றைய செலவு போக கடன் இல்லாமல் கூடுதலாக பணம் 
இருக்கிறதோ அவர்களெல்லாம் குர்பானி கொடுக்க வேண்டும்.
குர்பானி கொடுக்க எண்ணியவர்கள் துல்ஹஜ் பிறை ஒன்று முதல் குர்பானி 
கொடுக்கும்வரை நகம் முடியை வெட்டகூடாது.
நபி[ஸல்]அவர்கள் ஆடு,மாடு,ஒட்டகம் ஆகியவற்றை குர்பானி கொடுத்ததாக ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன.எனவே இம்மூன்று பிராணிகளும் குர்பானிக்கு தகுதியானதாகும்.

குர்பானி பிராணிகள் நல்லதிடகாத்திரமானதாகவும்,ஆரோக்கியமானதாகவும் 
இருக்கவேண்டும்.பொதுவாக எந்த குறையும் இருக்க கூடாது.
குர்பானி பிராணிகளை வாங்கும்போது நல்ல தரமான உயர் ரகமானதை 
வாங்குவது நன்மையை அதிகரித்திடும்.
நாங்கள் ஏழு நபர்கள் சார்பாக ஒரு ஒட்டகத்தையும்,ஏழு நபர்கள் சார்பாக ஒரு மாட்டையும்குர்பானிகொடுத்தோம்என்றுஜாபர்[ரலி]அறிவிக்கிறார்கள்[முஸ்லிம்]
நபி[ஸல்]அவர்கள் 'பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்'என்று கூறி கூர்மையான கத்தியால் அறுத்துள்ளார்கள்[புகாரி]
பெருமையை விரும்பாமல் ஏழைகளின் தேவைகளை கருதி எத்தனை பிராணிகளை வேண்டுமானாலும் குர்பானி கொடுக்கலாம்.வீண் விரயமாகாமல் இருக்கவேண்டும்.

பங்கிடுதலைப் பொறுத்தவரை யாருக்கு எத்தனை சதவிகிதம் என்றெல்லாம் 
கட்டளையிடப்படவில்லை.தர்மம் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.குர்பானியின் பிராணியின் தோலையும் ஏழைகளுக்கு தர்மமாக வழங்கிடுமாறு நபி[ஸல்] கூறுகிறார்கள்[புகாரி,முஸ்லிம்]

குர்பானி கொடுத்ததும்  'யா அல்லாஹ்'   எனது இந்த குர்பானியை ஏற்றுக் 
கொள்வாயாக! என்று  துஆ செய்யலாம்.

அல்லாஹ்நம்அனைவருக்குமகுர்பானிகொடுக்கும்தகுதியையும், ஆவலையும்  தந்து அதை முறையுடன் நிறைவேற்றி அதன் பயனையும்.நன்மையையும் இறை திருப்தியையும் அடைந்து கொள்ளும் வாய்ப்பை தந்தருள்வானாக!ஆமீன்.                          

சனி, 5 அக்டோபர், 2013

நபி(ஸல்) அவர்களை கனவில் காண முடியுமா?

"ஒரு மூமின் வெள்ளிக்கிழமை இரவு இரண்டு ரக்அத் தொழுது அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் குல்ஹுவல்லாஹு... சூராவை 25 தடவை ஓதிவிட்டு, பின்பு ஸலாம் கொடுத்து விட்டு 'ஸல்லல்லாஹு அலா முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி' என்று ஆயிரம் தடவை கூறினால் அன்றைய இரவில் கனவில் என்னை நிச்சயமாக காண்பான். மறுவாரம் வெள்ளி வரும் முன் கனவில் என்னைக் காண்பான். என்னை ஒரு வாரம் பார்த்துவிட்டால் அல்லாஹ் அவனது குற்றங்களை மன்னிக்கிறான்."

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் ஒரு செய்தியை இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் தனது 'அல்மவ்ளூஆத்' எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
இதன் அறிவிப்பாளர் வரிசையில் யாரென்றே அறியப்படாதவர்கள் அறிமுகமற்ற பலர் இடம் பெறுவதிலிருந்தே இது பலவீனமான செய்தி தான் என்பது புலனாகும்.

நபி(ஸல்) அவர்களை கனவில் நாம் காண முடியுமா? காண முடியும் என்பதற்கு சிலர் கீழ்க்கண்ட ஹதீஸ்களை ஆதாரமாக வைக்கின்றனர்.

"யார் என்னை கனவில் காண்கிறாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.

யார் என்னைக் காண்கிறானோ அவன் உண்மையையே கண்டான் என்று நபி(ஸல்) கூறியதாக அபூகதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அஹ்மத்.

இந்த ஹதீஸ்கள் மேலெழுந்த வாயாகப் பார்க்கும் போது நபி(ஸல்) அவர்களை கனவில் காண முடியும் என்று தெரிந்தாலும், உண்மையில் நபி(ஸல்) அவர்களை கனவில் காண வேண்டுமானால் அவர்கள் உயிருடன் இருக்கும் போது கனவில் காண்பவர் நபி(ஸல்) அவர்களைத் தான் கண்டு கொண்டார் என்றும் அல்லது இதுவரை நேரில் காணாதவர், கனவின் மூலம் கண்டால் இனி நேரிலும் காண்பார் என்றும் தான் முடிவுக்கு வரவேண்டும். "இந்த முடிவு தான் மேற்கொள்ள வேண்டும்" என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

'யார் என்னை கனவில் காண்கிறாரோ அவர் (நேரிலும்) விழிப்பிலும் என்னைக் காண்பார். ஏனென்றால் ஷைத்தான் என் வடிவத்தில் வரமாட்டான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.

கனவில் கண்டால் நேரிலும் காண்பார் என்றால், நேரில் காண்பது அவர்கள் உயிருடன் உள்ள காலத்திலேயே பொருந்தும். தெளிவான ஆதாரப்பூர்வமான ஹதீஸ் மூலம் அவர்கள் உயிருடன் வசிக்காத காலத்தில் உள்ள நம்மைப் போன்றவர்களால் நபி(ஸல்) அவர்களைக் காண முடியாது என்பது தெளிவாகிறது.

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

சுவர்க்கத்தின் தலைவி பாத்திமா நாயகி

அன்னை பாத்திமா அவர்கள் பாவ அசூசியை வென்ற அதி பரிசுத்தவான்களின் பட்டியலில் இடம் பெறுகின்றவர். ஆகவே அன்னாரது சிறப்புக்களைச் சித்தரிப்பது என்பது இலகுவானதல்ல. அன்னை பாத்திமாவையும் அவரது குடும்பத்தினரையும் நேசித்து அவர்களது வழிபற்றி நடப்பது எமது கடமையாகும்.
பாத்திமாவின் கோபத்தால் இறைவன் கோபப் படுகிறான். பாத்திமா விரும்புவதை இறையோனும் விரும்புகின்றான். இத்தகு மாட்சிமை பொருந்திய மங்கையின் சிறப்பை மானுட வார்த்தைக்குள் வர்ணிப்பது எவ்விதம் சாத்தியமாகும்?
அன்னையாரின் மகிமை பற்றி நபியவர்களும், உன்னத இமாம்களும் சொல்வதைக் கேளுங்கள்.
நபி(ஸல்)அவர்கள்
"
அல்லாஹ்வின் கட்டளைப்படி என்னிடம் வந்த வானவர் ஒருவர், பாதிமா சுவனத்திலுள்ள பெண்களுக்குத் தலைவியாவார் எனவும் ஹஸனும் ஹுஸைனும் சுவர்க்கத்து இளைஞர்களின் தலைவர்கள் எனவும் நன்மாராயம் கூறிச் சென்றார்."

"
உலக மாதர்களில் உன்னதமானவர்கள் நால்வர். இம்றானின் மகள் மர்யம், குவைலிதின் மகள் கதீஜா, மஸாஹிமின் மகள் (பிர்அவ்னின் மனைவி) ஆஸியா மற்றும் முஹம்மதின் மகள் பாத்திமா."

"
சுவனம் நான்கு பெண்களைக் காண ஆசைப்படுகிறது. அவர்கள், இம்ரானின் மகள் மர்யம், பிர்அவ்னின் மனைவி ஆஸியா, குவைலிதின் மகள் கதீஜா, மற்றும் முஹம்மதின் மகள் பாத்திமா ஆவர்."

"
இறைவன் பாத்திமாவின் கோபத்தால் கோபமடைகிறான். பாத்திமாவின் மகிழ்சியை விரும்புகினள்றான்."

இமாம் மூஸா இப்னு ஜஉபர் (அலை)

"
இறைவன் நான்கு பெண்களை சிறப்புள்ள பெண்களாகத் தேர்ந்தெடுத்துள்ளான். அவர்கள் மர்யம், ஆஸியா, கதீஜா,பாத்திமா (அலைஹின்னஸ்ஸலாம்) ஆவர் என நபியவர்கள் அறிவித்துள்ளார்கள்."

இமாம் றிழா (அலை)


"
எனக்கும் அலீக்கும் பிறகு இவ்வுலகில் சிறந்தவர்களாக ஹஸனும் ஹுஸைனும் உள்ளனர். பெண்களில் சிறந்தவராக இவ்விருவரின் தாயாரான பாத்திமா திகழ்கிறார் என நபியவர்கள் நவின்றார்கள்.||
இமாம் புகாரி மற்றும் இமாம் முஸ்லிம் இருவரும் தமது ஹதீஸ் கிரந்தங்களில் பின்வரும் ஹதீஸை அறிவித்துள்ளார்கள்:


"
பாத்திமா சுவனத்துப் பெண்களின் தலைவியாவார்."

"
பாத்திமா சுவனத்துப் பெண்களுக்குத் தலைவி என்ற நாயகத்தின் கூற்றுக்கு, பாத்திமா தனது காலத்துப் பெண்களுக்கு மட்டும் தான் தலைவி என பொருள் கொள்ளலாமா?" என இமாம் சாதிக் அவர்களிடம் கேட்கப்பட்ட போது:
"இக் கூற்று ஹஸரத் மர்யத்தைத் தான் குறிக்கிறது. அவர் தான் தமது காலத்துப் பெண்களுக்குத் தலைவியாகத் திகழ்ந்தார், ஆனால் பாத்திமாவோ சுவனத்திலுள்ள ஆரம்ப முதல் கடைசி வரையிலான அனைத்துப் பெண்களுக்கும் தலைவியாவார்" எனக் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதரே, பாத்திமா தனது காலப் பெண்களுக்கா தலைவி? என வினவப்பட்ட போது, "இம்றானின் மகளான மர்யம் தான் தனது காலப் பெண்களின் தலைவியாக இருந்தார். ஆனால் எனது மகள் பாத்திமா உலகத்திலுள்ள ஆரம்ப முதல் கடைசி வரையிலான அனைத்துப் பெண்களினதும் தலைவியாகும்" எனப் பதிலளித்தார்கள்.

கியாமத் நாளன்று இறைவனின் அர்ஷுக்குக் கீழ் இருந்து ஒரு சப்தம் வெளியாகும். "சிருஷ்டிகளே, முஹம்மதின் மகள் பாத்திமா ஸிராத் பாலத்தைக் கடக்க வருகிறார். தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்" எனக் கூறப்படும் என அண்ணல் நபியவர்கள் அருளியதாக தமது தந்தை அறிவித்ததாக இமாம் றிழா அலைஹிஸ் ஸலாம் கூறினார்கள்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அருளியதாக, அபூ ஐயூப் அன்ஸாரி (றழி) அறவிப்பதாவது: கியாமத் நாளன்று அல்லாஹ்வின் அர்ஷின் கீழிருந்து ஒரு சப்தம் வெளியாகி, சனங்களே, பாத்திமா சிராத் பாலத்தைக் கடக்கப் போகிறார். உங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள் எனக் கூறும். அப்போது பாத்திமா நாயகி அவர்கள் எழுபதினாயிரம் ஹுருல் ஈன் பெண்களுடன் சிராத்துல் முஸ்தகீமைக் கடந்து செல்வார்கள்.

நபி (ஸல்)அவர்கள், அன்னை பாத்திமாவை நோக்கி, "பாத்திமாவே! இறைவன் மீண்டும் ஒரு முறை மானிட வர்க்கத்தைப் பார்த்து விட்டு அவர்களிலிருந்து உமது கணவரைத் தேர்;ந்தெடுத்து உமக்கு அவரை மணமுடித்துக் கொடுக்கும் படி எனக்கு வஹீ மூலம் அறிவித்தான். உம்மை சங்கைப்படுத்துவதற்காக முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒருவரை மணமுடித்துத் தந்துள்ளானே" என நவின்றார்கள்.
இமாம் சாதிக் (அலை) அறிவிக்கிறார்கள்:
ஹஸரத் அலீ அவர்களை இறைவன் பாத்திமாவுக்கு கணவராகப் படைக்கவில்லை என்றிருந்தால் பாத்திமாவுக்கு இந்த உலகில் கணவரே இருந்திருக்காது.

இமாம் சாதிக் கூறியதாக சுப்யான் இப்னு உயைனிய்யா அறிவிப்பதாவது:

مرج البحرين يلتقيان -‘இரண்டு சமுத்திரங்கள் ஒன்றையொன்று சந்திக்க அனுமதித்தான்’ என்ற திருவசனங்களின் வியாக்கியானம் ஹஸரத் அலீயும் பாத்திமாவும் ஆவர். அவ்வாறேيخرج منهما اللوُِلوً والمرجان அவை இரண்டிலும் இருந்து முத்தும் மாணிக்கமும் வெளியாகும்’ என்றால் ஹஸனும் ஹுஸைனும் ஆவர்.

அன்னை பாத்திமா ஏன் அஸ்ஸஹ்ரா (பளிச்சிட்டு இலங்கக் கூடியது) என அழைக்கப்படுகிறார் என இமாம் ஸாதிக் அவர்களிடம் கேட்கப்பபட்ட போது, பாத்திமா தன் தொழுகைக்காக மிஹ்ராபில் நிற்கின்ற போது, பூமியில் வசிப்போருக்கு நட்சத்திரங்கள் இலங்குவதைப் போன்று வானோருக்கு பாத்திமா இலங்கிக் கொண்டிருப்பார் என விளக்கினார்கள்.

பாத்திமா எப்போதாவது இறை வணக்கத்தில் திளைத்துவிடும் போது அவர்களின் சிறு குழந்தை அழுதால் அக்குழந்தையின் தொட்டிலை இறைமலக்கு ஒருவர் ஆட்டி விடுவதாக றிவாயத்துகளில் கூறப்பட்டுள்ளது.

இமாம் பாக்கிர் (அலை):அவர்கள்  அறிவிக்கின்றார்கள்.

சல்மான் பார்ஸி (றழி) அவர்கள் கூறினார்கள். நபியவர்கள் என்னை ஒரு காரியமாக பாத்திமாவின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். நான் அங்கு சென்ற போது அன்னை வணக்கத்தில் ஈடுபட்டு ஓதிக் கொண்டிருப்பதைச் செவியுற்றேன். அவரது வீட்டிலுள்ள கோதுமை அரைக்கும் கல் இயங்கிக் கொண்டிருப்பதையும் கண்ணுற்றேன்.

தந்தையின் பாசம் :

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருமை மகள் பாத்திமா மீது கொண்டிருந்த அளவற்ற பாசம் பாத்திமாவைப் பொறுத்த வரை மகத்துவமிக்க தம் வாழ்வை மேலும் ஒளிமயமாக்குவதாகவே இருந்தது மட்டுமன்றி நபிகளாரின் வாழ்விலும் கூட வியக்கத்தக்க அம்சமாகவே காணப்பட்டது.

அண்ணல் நபிகளாரின் சிறப்புகள் வர்ணிப்புகளுக்கு அப்பாற்பட்டதாகும். நற்குணங்களின் சிகரமாகத் திகழ்ந்த அன்னாரின் மகிமை மனித குலத்தைத் தாண்டி விண்ணுலகத்தாரிற்கும் அறிமுகமாகி இருந்தது. ‘இறைஞான வெளிப்பாடாகவே அன்றி தம் இச்சைப்படி எதையும் சொல்பவர் அன்று" என இறைவனாலேயே விதந்துரைக்கப்பட்டவர்.

அத்தகைய சிறப்புகள் பெற்ற அண்ணல் நபியவர்களின் அளப்பரிய நேசத்துக்கும் பாசத்துக்கும் ஆளாகும் சிறப்புக் கிடைக்கப் பெறுபவர் ஐயம் எதுவுமின்றி மிக்க மரியாதைக்கும் கண்ணியத்துக்கும் புனிதத்துக்கும் உரித்தானவர் ஆவார். இதனால் தான் அன்னை பாத்திமாவை இமாம்கள், பரிசுத்தவான்களின் பட்டியலில் கூட சேர்த்துக் கணிப்பிடுகிறார்கள்.

அருமை நபியவர்கள் தமது ஏனைய பிள்ளைகள் மீதும் பாசம் வைத்திருந்தார்கள். எனினும் பாத்திமா மீது காட்டிய பாசம் வித்தியாசமானதாகவே இருந்தது. அது ஒரு பாசமிக்க தந்தை தன் மகள் மீது வைக்கின்ற சாதாரண பாசமாக மட்டும் இருக்கவில்லை. பாத்திமாவின் மகிமையை உலகுக்கு விதந்துரைக்கும் பாசமாக அமைந்தது.

அந்த இணையற்ற பாசத்தின் வெளிப்பாடுகளாக அமைந்த சில சம்பவங்களைக் கவனியுங்கள்.

1. அண்ணல் நபியவர்கள் எப்போதாயினும் பிரயாணம் மேள்கொள்ள விரும்பினால் இறுதியாக ஹஸ்ரத் பாத்திமாவிடமே விடைபெற்றுக் கொள்வார்கள். அவ்வாறே பிரயாணத்திலிருந்து திரும்பி வந்ததும் முதலில் பாத்திமாவையே காணச் செல்வார்கள்.

2. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தூங்கச் செல்லும் முன்னர் பாத்திமாவின் திருமுகத்தில் முத்தமிட்டு அவரது தலையை தம் நெஞ்சோடு அணைத்துக் கொள்வார்கள் என இமாம் பாக்கிர் மற்றும் இமாம் ஸாதிக் இருவரும் அறிவிக்கின்றார்கள்.

3. அன்னை பாத்திமா நவின்றதாக இமாம் ஸாதிக் அறிவிக்கிறார்கள்: "நீங்கள் ஒருவரையொருவர் விளித்து அழைத்துக் கொள்வதைப் போன்று நபியவர்களை அழைக்க வேண்டாம்" 
"இத்தூதரை அழைப்பதை உங்களுக்கிடையில் சிலர் சிலரை
அழைப்பது போன்று ஆக்கிக்கொள்ளாதீர்கள். உங்களில்
யார் மறைவாக நழுவிச் செல்கிறார்களோ அவர்களை
அல்லாஹ் நன்கறிவான்.அவரின் கட்டளைக்கு மாறு
செய்வோர் தமக்கு ஒரு துன்பம் நேருவதையோ
அல்லது தமக்கு நோவினை தரும் வேதனை
ஏற்படுவதையோ அஞ்சிக்கொள்ளட்டும்".
(அல்குர்ஆன் .24:63) சூரத்துன் நூர் அத்தியாயம் 24 வசனம் 63
என்ற குர்ஆன் வசனம் அருளப்பட்ட பின்னர் நபிகளாரை தந்தையாரே என அழைக்கப் பயந்து அல்லாஹ்வின் தூதரே என்று அழைக்கலானேன். ஓரிரு தடவைகள் இதனை நன்கு அவதானித்த நபியவர்கள் ஒரு முறை என்னிடம் சொன்னார்கள்:

"
பாத்திமாவே, இந்தத் திருவசனம் உமக்காகவோ உமது சந்ததியைச் சேர்ந்தவருக்காகவோ இறக்கப்பட்டதல்ல. நானோ உன்னைச் சார்ந்தவன். நீரும் என்னைச் சார்ந்தவள்..... எனவே நீர் என்னை வழமை போன்று தந்தையே என்றே அழைத்து வருவீராக. அது எனது உள்ளத்துக்கு அமைதியைத் தருவதோடு இறைவனையும் மகிழ்விக்கிறது."

4. இறைத் தூதர் (ஸல்) அருளினார்கள்: "பாத்திமா என் உடம்பின் ஒரு பகுதியாவார். எவர் பாத்திமாவை சந்தோஷப் படுத்துகிறாரோ அவர் என்னை சந்தோஷப்படுத்துகிறார். எவர் அவரை நோவினை செய்கிறாரோ அவர் என்னையும் நோவினை செய்தவாராவார். பாத்திமா என்னிடம் மிகவும் சங்கை மிக்கவர் ஆவார்."

5. அண்ணல் நபியவர்கள் மீண்டும் இயம்பினார்கள்: "பாத்திமா எனது உடலினதும் உயிரினதும் உள்ளத்தினதும் ஒரு பகுதியாவார். எவர் பாத்திமாவைத் தொல்லைப் படுத்துகின்றாரோ அவர் என்னை நோவினை செய்கிறார். எவர் எனக்கு வேதனையைத் தருகின்றாரோ அவர் அல்லாஹ்வை நோவினை செய்வது போலாகும்."

6. ஆமிர் ஷஃபீ, ஹஸன் பஸரீ, சுப்யான் ஸவ்ரீ, முஜாஹித், இப்னு ஜுபைர், ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அல் அன்ஸாரீ, இமாம் பாக்கிர் மற்றும் இமாம் ஸாதிக் போன்றோர் அறிவிப்பதாவது: "பாத்திமா எனது உடலின் ஒரு பகுதியாகும். எவர் பாத்திமாவை நோவிக்கின்றாரோ அவர் என்னை நோவிக்கின்றார்" என நபியவர்கள் திருவுளமானார்கள்.

7. நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை பாத்திமாவின் கையைப் பிடித்தவர்களாக வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். பின்னர் முன்னின்றோரை நோக்கிச் சொன்னார்கள்: "இவரை (பாத்திமாவை)- யாருக்கெல்லாம் தெரியுமோ அவர்கள் இவரை அறிந்து கொண்டார்கள். இன்னும் எவர்கள் பாததிமாவை அறிந்து கொள்ளவில்லையோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும். இவர் தான் முஹம்மதின் புத்திரி பாத்திமா. இவர் எனது உடம்பினதும் உள்ளத்தினதும் உயிரினதும் ஒரு பகுதியாவார். எனவே எவர் பாத்திமாவை நோவினை செய்கின்றாரோ அவர் என்னை நோவிக்கின்றார். எவர் என்னை நோவிக்கின்றாரோ அவர் அல்லாஹ்வை நோவித்தவராவார்"
8. மேலும் ஒரு முறை நபியவர்கள் நவின்றார்கள்: "என் மகள் பாத்திமா உலகத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரைக்குமுள்ள அனைத்து பெண்களினதும் தலைவியாவார். பாத்திமா எனது உடலின் ஒரு பகுதி. எனது கண்ணின்ஒளி. எனது ஆறுயிர், எனது இதயக் கனி. பாத்திமா மனிதத் தோற்றத்தில் வந்த விண்ணுலகப் பெண்மணி. பாத்திமா தொழுகைக்காக நிற்கும் போது, பூமியிலுள்ளோருக்கு வானத்து நட்சத்திரங்கள் இலங்கு வதைப் போன்று வானுலகத்தோருக்கு இலங்கிக் கொண்டிருப்பார். அவ்வேளை இறைவன் தனது மலக்குகளை நோக்கி, என் சந்நிதானத்தில் என்னை அஞ்சி நடுங்கி வழிபடுகின்ற என் அடிமை பாத்திமாவைப் பாருங்கள். பாத்திமா என்னை உண்மையாகவே வணங்குபவர். பாத்திமாவை வழிப்படுகின்ற எவரையும் நான் நரகத்தில் போடமாட்டேன். இதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் எனக் கூறுவான்."
பாத்திமா நாயகியின் திருமணம்.
ஹிஜ்ரி இரண்டாம் வருடம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மங்கை பாத்திமாவை அண்ணல் அலீக்கு மணமுடித்து வைத்தார்கள். இவ்விருவரினதும் தரத்துக்கும் அந்தஸ்துக்கும் ஏற்புடையதாக அத்திருமணம் அமைந்தது. இமாம்களின் கூற்றுப்படி பாத்திமாவுக்குக் கணவராக ஹஸ்ரத் அலீ படைக்கப்பபடவில்லை யென்றிருந்தால் பாத்திமாவுக்கு உகந்த துணை யாரும் இருந்திருக்க முடியாது.

ஹஸ்ரத் அலீயினதும் அன்னை பாத்திமாவினதும் சிறப்புகளை மேலும் புலப்படுத்தும் விதமாக இத்திருமணம் அமைந்திருந்தது. பாத்திமாவை மணந்துகொள்ள குறைஷி முக்கியஸ்தர்கள் பலர் முன்வந்த போதெல்லாம் நபியவர்கள்‘பாத்திமாவின் திருமணம் அல்லாஹ்வின் கையிலேயே இருக்கிறது’ எனப் பதிலளித்தார்கள்.
ஆனால் ஹஸ்ரத் பாத்திமாவைப் தனக்கு மணமுடித்து தருமாறு ஹஸ்ரத் அலீ(ரலி)அவர்கள் நபியவர்களிடம் கேட்டுச்சென்ற போது எவ்வித மறுப்புமின்றி சம்மதம் தெரிவித்ததோடு, சற்று முன்னர் தான் ஜிப்ரயீல் (அலை) பிரசன்னமாகி, பாத்திமாவை அலீக்கு மணமுடித்துக் கொடுக்க கட்டளையிட்டதாக அறிவித்துச் சென்றதாகக் கூறினார்கள்.
திருமண செலவுகளுக்காக தம்மிடம் என்ன வைத்திருக்கிறீர்கள் என நபியவர்கள் ஹஸ்ரத் அலீயிடம் வினவிய போது,ஒரு போர்க் கேடயமும் ஒரு வாளும் நீர் கொண்டுவரப் பயன்படும் ஓர் ஒட்டகையும் தம்மிடம் இருப்பதாக அலீ பதிலளித்தார்கள். கேடயத்தை விற்று வரும் 500 திர்ஹம்களில், வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குமாறு அவரைப் பணித்தார் அண்ணல் பெருமான்.
அவ்வாறே குறிப்பிட்ட சில பொருட்கள் வாங்கப்பட்டன. ஏனைய முஸ்லிம்களும் அழைக்கப்பட்டு விருந்து உபசாரமும் வழங்கப்பட்டு நபியவர்களின் பிரார்த்தனையோடு திருமண வைபவம் இனிதே நடந்தேறியது.
ஒளிமயமான இத்திருமணத்தின் எப்பகுதியை உற்று நோக்கினாலும் இறைவனின் தனிக் கிருபையும் அருளும் அதில் நிறைந்து காணப்பட்டதை உணர முடிந்தது. அது மட்டுமன்றி திருமணங்கள் மிக எளிமையாக நடாத்தப் படுவதற்கு சிறந்த முன்மாதிரியாகவும் திகழ்ந்தது.


எளிமையான இனிய இல்லறம் :

ஹஸ்ரத் அலீ(ரலி)அவர்கள் பாத்திமாவைப் பெண்கேட்டு நபியவர்களிடம் வந்த போது, நபியவர்கள் சொன்னார்கள். உமக்கு முன்னரும் பலர் பாத்திமாவைக் கேட்டு வந்த போதும் நான் பாத்திமாவிடம் அது பற்றி விசாரித்ததுண்டு. அப்போதெல்லாம் அதிருப்தியோடு முகத்தைத் திருப்பிக் கொண்டார். நீங்கள் சிறிது இங்கே உட்கார்ந்து கொள்ளுங்கள். பாத்திமாவிடமும் ஒரு வார்த்தை கேட்டு வருகிறேன் என்று கூறியவாறு வீடு சென்றார். பாத்திமாவிட்ம விடயத்தைக் கூறிய போது முன்னர் போன்று அதிருப்தி தெரிவிக்காது மௌனம் சாதித்தார். நபியவர்கள், "அல்லாஹ் மிகப் பெரியவன். பாத்திமாவின் மௌனம் சம்மதத்துக்கு அடையாளமாகும்" எனக் கூறினார்கள்.

ஹஸ்ரத் அலீ(ரலி)அவர்கள் தமது கேடயத்தை விற்று வழங்கிய மஹர் பணத்தில் ஒரு பகுதியைச் செலவிட்டு பின்வரும் பொருட்கள் இல்லறத்துக்காக வாங்கப்பட்டன.

1. பெண்களுக்கான நீண்ட மேலாடை ஒன்று.
2.
ஒரு பெரிய துப்பட்டி.
3.
கைபர் துவாய் ஒன்று.
4.
ஒரு கயிற்றுக் கட்டில்.
5.
ஈத்தம் ஓலை நிரப்பிய ஒரு முதுகு அணை.
6.
ஆட்டு ரோமம் நிரப்பிய ஒரு முதுகு அணை.
7.
நான்கு தலையணைகள்.
8.
ஒரு திரைச் சீலை.
9.
ஓர் ஈத்தம் பாய்.
10.
மாவரைக்கும் கல் ஒன்று.
11.
ஒரு துருத்தி.
12.
தோல் பை ஒன்று.
13.
ஆடை துவைக்கும் பாத்திரம் ஒன்று.
14.
ஒரு பால் கோப்பை.
15.
நீரேந்தும் பாத்திரம் ஒன்று.
16.
சில மண் கூசாக்கள்.
17.
ஒரு சாடி.
ஹஸ்ரத் அலீயும் தம் பங்குக்கு வீட்டு நிலத்தை மணல் தூவி மென்மைப்படுத்தினார்கள். ஆடைகளைக் கொழுவி வைப்பதற்காக மரத் தடியொன்றை வீட்டு நடுவே நட்டார்கள். பதனிடப்பட்ட ஆட்டுத் தோல் ஒன்றையும் ஈத்தம் ஓலையால் ஆன முதுகு அணை ஒன்றையும் மேலதிகமாக வாங்கி வந்தார்கள்.

பண்புகளின் உறைவிடம்..

1. பற்றற்ற தன்மை.

இமாம் ஸாதிக் மற்றும் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ஆகியோர் அறிவிக்கிறார்கள்:
கடினமான ஆடை அணிந்து குழந்தைக்குப் பாலூட்டிய வண்ணம் மாவரைக்கும் தன் அருமை மகளைக் கண்ட நபி பெருமான், அருமை மகளே, "துன்யாவின் கஷ்டத்தை மறுமைக்காகப் பொறுத்துக் கொள்" என்றார்கள்.
அதற்கு பாத்திமா, அல்லாஹ் என் மீது சொறிந்துள்ள அருளையும் கருணையையும் நினைத்து அவனுக்கு நன்றி கூறுகின்றேன் என்றார். அக்கணம் பின்வரும் இறைவசனம் அருளப்பட்டது.
"உமது இரட்சகன் உமக்கு வழங்குவான் அப்போது நீர்
திருப்தியடைவீர்."(93:5)

2. இல்லத்தரசி

இமாம் ஸாதிக் கூறுகின்றார்: " இமாம் அலீ விறகும் தண்ணீரும் கொண்டு வருவார். பாத்திமா மா அரைத்துப் பிசைந்து உணவு தயாரிப்பார். கிளிந்த ஆடைகளுக்கு அண்டை போடுவார். அவரது கலங்கமற்ற அழகுக்கு உவமை கிடையாது. அவர் மீதும் அவரது தந்தை மீதும் அவரது கணவர் மற்றும் பிள்ளைகள் மீதும் அல்லாஹ்வின் சோபனம் உண்டாவதாக.||
தண்ணீர்த் துருத்தியைச் சுமப்பதால் பாத்திமாவின் நெஞ்சுப் பகுதி பாதிப்புற்றது. மாவு அரைக்கும் வேலையைத் தாமாகவே மேற்கொண்டதால் திருக் கரங்கள் புண்ணாகின. வீட்டை சுத்தப்படுத்துதல் மற்றும் அடுப்பு மூட்டுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுவதனால் அவரது உடுப்புகள் புகை நிறமாக ஆகிவிடும். இப்படிப்பட்ட காரியங்களில் அவர் மிக்க சிரமத்தை மேற்கொண்டார். என ஹஸ்ரத் அலீ(ரலி)அவர்கள் நவின்றார்கள்.

3. தந்தையின் உதவி :

நபி (ஸல்) அவர்கள் மகளின் வீட்டுக்குச் சென்றார். ஹஸ்ரத் அலீயும் பாத்திமாவும் இருவருமாக மாவரைக்கும் கல்லைச் சுற்றிக் கொண்டிருந்தார்கள். "உங்களில் யார் அதிகம் களைப்படைந்திருக்கிறீர்கள்?" என வினவ, "பாத்திமா தான் இறை தூதரே" என்றார் அலீ. "மகளே எழுந்திரும்" என் மகளைப் பணிக்க பாத்திமாவும் எழுந்தார். பாத்திமாவுக்குப் பதிலாக அவ்விடத்தில் உட்கார்ந்த அப்புனிதர், அலீயுடன் இணைந்து மாவரைக்கலானார்கள்.

4. கணவரிடம் எதையும் கேட்காதவர் 

இமாம் பாக்கிர் (அலை)அவர்கள் கூறுகிறார்: வீட்டு வேளைகள், மாவரைத்தல், உணவு சமைத்தல் போன்றவற்றைத் தாம் செய்வதாக அன்னை பாத்திமாவும் விறகு, தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களைக் கொண்டு வரும் பணியை அலீயும் மேற்கொள்வதாக இருவரும் பொருந்திக் கொண்டனர்.

ஒரு முறை வீட்டுக்கு வந்த ஹஸ்ரத் அலீ, ‘சாப்பிடுவதற்கு ஏதும் இருக்கிறதா?’ என பாத்திமாவைக் கனிவுடன் கேட்டார். அதற்கு அன்னையாரோ, ‘தங்களை சங்கைப் படுத்திய இறைவன் மீது ஆணையாக, கடந்த மூன்று நாட்களாக வீட்டில் உணவு ஏதும் கிடையாது’ என்றார் வினயமாக.
இதைப் பற்றி என்னிடம் ஏன் தாங்கள் சொல்லவில்லை, நபியின் மகளே’ என விசாரித்தார் அலீ.(ரலி)அவர்கள்
அதற்கு அன்னையார், ‘உமது கணவர் ஏதும் கொண்டு வந்தால் அதனைப் பெற்றுக் கொள்ளுங்கள். அது தவிர அவரிடம் எதனையும் கேட்க வேண்டாம் என்று அண்ணல் நபியவர்கள் எனக்குப் பணித்திருக்கிறார்கள். அதனால் தான் எதுவும் கேட்கவில்லை| என்றார்.

5. புரிந்துணர்வு 

அமீருல் முஃமினீன் கூறுகிறார்கள்:
"அல்லாஹ்வின் மீது ஆணையாக, பாத்திமாவுடன் வாழ்ககை நடத்திய காலத்தில் நான் எப்போதாயினும் அவரைக் கோபப் படுத்தியதில்லை. எந்தக் காரியத்தையும் செய்யுமாறு நான் கட்டாயப் படுத்தியதுமில்லை. அவரும் என்னுடன் கோபம் வரும்படி நடந்தது கிடையாது. என் பேச்சுக்கு மாற்றமாக நடந்ததும் கிடையாது. அவரைக் கண்ணுற்ற போதெல்லாம் என் துன்பங்களை மறப்பேன். உள்ளம் அலாதியான அமைதி பெற்று விடும்.||


6. உண்மையின் சிகரம் 

"நபிகளாருக்குப் பிறகு பாத்திமாவின் அளவு உண்மை பேசுபவர் எவரையும் நான் கண்டதில்லை" என அன்னை ஆயிஷா அறிவித்துள்ளார்கள்.

7. வணக்கம் 

ஹஸனுல் பஸரீ அறிவிக்கிறார்:
"
நபியவர்களின் உம்மத்தில் பாத்திமாவை விடவும் இறைவணக்கம் புரிந்தவர் எவரும் இருக்கவில்லை. தம் புனித கால்கள் வீங்கும் அளவுக்கு நின்று வணங்குவார்கள்"

8. பிராத்தனை 

இமாம் ஹஸன் அலைஹிஸ் ஸலாம் அறிவிக்கின்றார்கள்:
"
எமது தாயார் இரவு வேளைகளில் நீண்ட நேரம் தொழுகையில் ஈடுபடுவார். ஒரு முறை வைகறை வரை அவ்வாறே வணக்கத்தில் ஈடுபட்டார்கள். விசுவாசிகளான எல்லா ஆண்களுக்காகவும் பெண்களுக்காகவும் ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு துவாச் செய்தார்கள். நமக்காகவோ தமக்காகவோ எதனையும் இறைவனிடம் கேட்கவில்லை.
"
ஏனையவர்களுக்காக துவாச் செய்யும் நீங்கள் தமக்காகவும் ஏன் துவாச் செய்யக் கூடாது?" என நான் அவரிடம் விசாரித்தேன். அதற்கு அவர்கள், "முதலில் அயலவர்கள். பின்னர் தான் நம்மவர்கள் மகனே எனப் பதிலளித்தார்கள்."

9. ஹிஜாப் 

இமாம் அலீ (ரலி) சொன்னதாக தமது தந்தைமார் வழியாக இமாம் மூஸா இப்னு ஜஉஃபர் அறிவிக்கிறார்கள்: ‘கண்பார்வையற்ற மனிதர் ஒருவர் பாத்திமாவின் வீட்டுக்கு வர அனுமதி கோரினார். தம்மை மறைத்துக் கொண்ட அவர், அம் மனிதருக்கு அனுமதி வழங்கினார். அவர் கண்பார்வையற்றவர் அல்லவா?அப்படியிருக்க நீங்கள் ஏன் இவ்வளவு மறைந்து கொள்ள வேண்டும்? என அங்கிருந்த அண்ணல் பெருமான் வினவினார்கள்.


"
அவர் என்னைப் பார்க்காவிட்டாலும் நான் அவரைப் பார்க்கலாம் அல்லவா? தவிரவும் அவரால் வாசங்களை நுகர முடிகிறதல்லவா. அவரது பார்;வையிலன்றி நுகர்;தலில் குறையில்லை தானே" என்ற பாத்திமாவின் பதிலைக் கேட்ட பெருமான் நபியவர்கள், "நீர் என்னிலிருந்தும் ஒரு பகுதி தான் என்பதற்கு சான்று பகர்கிறேன்" எனக் கூறினார்கள. .


10. கற்புற்பும்,பார்வையும். 

"பெண்ணுக்கு மிகவும் சிறந்தது என்ன?" என வினவப்பட்ட போது அன்னை பாத்திமா "அவர்கள் ஆண்களைப் பார்க்காமல் இருப்பதும் ஆண்களில் கண்களில் படாதிருப்பதும் ஆகும் " எனப் பதிலளித்தார்கள்.

"
ஒரு பெண் இறைவனுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பது எப்போது?" என நபியவர்கள் தம் தோழர்களிடம் வினவியதற்கு அன்னை பாத்திமா அவர்கள், "தம் வீட்டில் ஒதுக்கமான இடத்தில் இருக்கின்ற சந்தர்ப்பமாகும்" எனக் கூறினார்கள்.
இப்பதிலைச் செவியுற்ற அண்ணல் நபியவர்கள், "பாத்திமா நிச்சயமாக என்னில் ஒரு பகுதியாவார்" என சிலாகித்துக் கூறினார்கள்.
இக்கருத்தின் உண்மை விளக்கம் என்னவெனின் பெண் வீட்டை விட்டு வெளியே வருவதால் ஹராமான செயல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்றிருந்தால் அத்தகைய செயல்களில் இருந்து தவிர்ந்து வீட்டோடு இருப்பது சிறப்பானது. அவ்வாறான பிரச்சினைகள் ஏதும் இல்லாத பட்சத்தில் தமது தேவைகளுக்காக வெளியே செல்வதில் எந்த தப்புமில்லை.

11. பணிப்பெண்ணாக 

ஸல்மானுல் பார்ஸி (றழி) அறிவிப்பதாவது: ஒரு நாள் பாத்திமா அவர்கள் பூமியில் அமர்ந்தவர்களாக கோதுமையை அரைத்துக் கொண்டிருந்தார். கல்லினால் மாவு அரைத்து எடுப்பதால் அவரின் இரு கைகளும் புண்ணாகி இருந்தன. அவ்வேளை சிறு குழந்தையாக இருந்த இமாம் ஹுஸைன் பசியினால் அழுது கொண்டிருந்தது.

நான் பாத்திமாவிடம், இறை தூதரின் மகளே, கைகள் புண்ணாகி இருப்பதால் மாவு அரைக்கும் பொறுப்பை ஏன் தங்களின் பணிப்பெண் ஃபிழ்ழாவிடம் கொடுக்கலாமே? என வினவினேன். அதற்கு அவர்கள், "மாவு அரைக்கும் பணியை ஒரு நாள் என்னைச் செய்யுமாறும் மறு நாள் ஃபிழ்ழாவைச் செய்யுமாறும் நபி (ஸல்) அவர்கள் பணித்துள்ளார்கள். எனவே நேற்று ஃபிழ்ழா மாவு அரைத்தார். இன்று எனது முறையாச்சே" என்றார்கள். .


12. அழகுக்கு அடிமை இல்லை 

அஸ்மா பிந்த் உமைஸ் கூறியதாக இமாம் ஸஜ்ஜாத் அலைஹிஸ் ஸலாம் அறிவிக்கிறார்கள்: நான் எனது பாட்டியாரான பாத்திமாவின் வீட்டுக்குள் சென்றிருந்தேன். அக்கணம் நபியவர்களும் அங்கே வருகை தந்தார்கள். பாத்திமா தமது கழுத்தில் ஹஸ்ரத் அலீ அவர்களால் கனீமத் பொருள் விற்று வாங்கப்பட்ட தங்கத்திலான கழுத்து ஆபரணம் ஒன்றை அணிந்திருந்தார்கள்.

இதைக் கண்ணுற்ற நபியவர்கள், "என்னருமை மகளே, மக்கள் பாத்திமாவைப் பார்த்து, ஆட்சியாளர்கள் அணியும் ஆபரணங்களை அணிந்துள்ளார் என்று சொல்லக் கூடாது" என்றார்கள்.
உடனே அன்னையவர்கள் தமது கழுத்து ஆபரணத்தைக் கழற்றி விற்று விட்டு அதன் பெறுமதியைக் கொண்டு ஓர் அடிமையை வாங்கி விடுதலை செய்தார்கள்.
பாத்திமாவின் இச் செயலைக் கண்ட பெருமானார் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
இமாம் பாக்கிர் அலைஹிஸ் ஸலாம் கூறுவதாவது:
நபி(ஸல்)அவர்கள் ஒரு பயணத்தை மேற்கொள்ள விரும்பினால் எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்ட பிறகு இறுதியாக பாத்திமாவிடம் சென்று விடை பெறுவார்கள். பாத்திமாவின் வீட்டில் இருந்து தான் அண்ணலாரின் பிரயாணம் ஆரம்பமாகும். பிரயாணத்திலிருந்து திரும்பி வரும் போது முதன் முதலில் சந்திக்கும் நபரும் பாத்திமாவாகும்.
ஒரு முறை நபியவர்கள் பிரயாணம் மேற்கொண்டு போய்விட்டார்கள். ஹஸ்ரத் அலீ அவர்களும் கனீமத்தாகக் கிடைத்த ஒரு பொருளை பாத்திமாவிடம் கையளித்து விட்டு பிரயாணம் சென்றார்கள்.
அன்னையவர்கள் அப்பொருளை விற்று இரு வெள்ளிக் காப்புகளையும் ஒரு நீண்ட திரைச் சீலையையும் வாங்கினார்கள். திரைச் சீலையை முன் வாயிலில தொங்கவிட்டு காப்புகளை தம் கைகளில் அணிந்து கொண்டார்கள்.
பிரயாணத்திலிருந்து திரும்பிய நபியவர்கள் வழமை போல பாத்திமாவின் வீட்டுக்கு வந்தார்கள். வாசலில் தொங்கும் திரையும் பாத்திமாவின் கைகளில் அணி;திருந்த காப்புகளும் அவர்களது கண்களில் பட்டன.
வீட்டில் நுழைய வந்த நபியவர்கள் வீட்டின் முற்றத்திலே அமர்ந்து கொண்டார்கள். நபிகளாரின் என்றுமில்லாத இந் நடத்தையைக் கண்ட பாத்திமா விடயத்தை விளங்கியவர்களாக திரையையும் இரு காப்புகளையும் கழற்றி ஹஸனிடமும் ஹுஸைனிடமும் கொடுத்து நபியவர்களிடம் எடுத்துச் சென்று எனது சலாத்தை எத்திவைத்து விட்டு,நீங்கள் பயணத்தில் இருக்கும் போது நாங்கள் இவ்விரு வேலையையும் தான் செய்தோம். உங்களது விருப்பமிருந்தால் இதை நாம் பாவிக்கலாம். இல்லையெனில் அதை எவருக்காவது கொடுத்துவிடலாம் என்று கூறுமாறும் சொல்லியனுப்பினார்கள்.
அவ்விருவரும் நபிகளாரை அடைய நபிகளார் அவர்களைத் தாவியணைத்து முத்தமிட்டு விடயத்தைச் செவியுற்றார்கள். பின்னர் இவ்விரு காப்புகளையும் அத்திரையையும் திண்ணைத் தோழர்களை அழைத்து பங்கிட்டு விட்டு, "பாத்திமாவுக்கு இறைவன் சுவர்க்கத்தில் அழகு ஆபரணங்களையும் அழகு ஆடைகளையும் அணிவிப்பான்" என்று கூறினார்கள்.


13. திருமண ஆடை 

அன்னை பாத்திமாவிடம் இருந்த ஆடை அண்டை போடப்பட்டதாக இருந்ததால் திருமணத்தின் போது நபியவர்கள் புது அங்கியொன்றை வாங்கிக் கொடுத்திருந்தார்கள்.

ஓர் ஏழை ஹஸ்ரத் பாத்திமாவின் வீட்டுக்கு வந்து, உடுப்பதற்கு ஏதும் பாவித்த ஆடைகள் ஏதும் இருந்தால் தந்துதவுமாறு கேட்டார். பழையதைக் கொடுக்க நினைத்த பாத்திமாவுக்கு, 
"நீங்கள் ஆசையோடு விரும்புபவற்றைத் தானம் செய்யாமல் எவ்விதத்திலும் நீங்கள் நன்மையடைய மாட்டீர்கள்." (3:92) 
என்ற இறைவசனம் ஞாபகத்துக்கு வர உடனே புத்தம் புது திருமண ஆடையை அந்த ஏழையிடம் மகிழ்ச்சியோடு கையளித்தார்கள். .


14. அறமும் துறவும் 

"
நிச்சயமாக அவர்கள் அனைவரும் சென்றடைவது நரகத்தைத் தான். அது ஏழு நுழைவாயில்களைக் கொண்டது. அவை ஒவ்வொன்றின் ஊடாகவும் குறிப்பிட்ட தொகையினர் உள் நுழைவார்கள்" (15:43-,-44) 
என்ற திருவசனம் அருளப்பட்ட பொழுது நபியவர்கள் கடுமையான கவலை கொண்டு அழ ஆரம்பித்தார்கள். நபியவர்களின் அழுகைக்கான காரணத்தைப் புரியாத ஸஹாபாக்கள் அன்னாரிடம் அது பற்றி விசாரிக்கவும் தைரியம் இல்லாமல் நபிகளாரின் அழுகையை மறக்கச் செய்ய ஒரே வழி பாத்திமாவை வரச் சொல்வது தான் என்று தீர்மானித்தார்கள்.

ஹஸ்ரத் பாத்திமாவிடம் விடயத்தைச் சொல்லும் பணி ஸல்மான் பார்ஸீ (றழி) அவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஹஸ்ரத் ஸல்மான் அங்கு சென்ற போது, ஹஸ்ரத் பாத்திமா "அல்லாஹ்விடம் உள்ளது சிறப்பானதும் நிரந்தரமானதும் ஆகும்" என்ற திருக்குர்ஆன் வசனத்தை ஓதிக் கொண்டே சிறிது கோதுமையை கல்லில் வைத்து அரைத்துக் கொண்டிருந்தார்கள். கடினமான ஆடையொன்றை அணிந்திருந்தார். அதில் பன்னிரண்டு இடங்களில் அண்டை போடப்பட்டிருப்பதை மேலோட்டமாகக் கண்டார் ஸல்மான். ஸல்மானைக் கவலை ஆட்கொண்டது. ரோம, பாரசீக மன்னர்களின் குமாரிகள் என்ன அழகான புத்தம் புது ஆடைகளை அணிந்து சொகுசாக வாழ்கிறார்கள். ஈருலகிலும் மக்களின் தலைவர் முஹம்மதின் புதல்வியின் ஏழ்மைக் கோலம் இப்படியிருக்கிறது என்ற நினைத்துக் கொண்டே அன்னையிடம் அண்ணலார் அழும் விடயத்தைக் கூறினார்கள்.

உடனடியாக நபியவர்களின் சந்நிதானத்துக்கு வருகை தந்த அன்னை பாத்திமா, "அருமைத் தந்தையே, என் ஆடையைக் கண்டு ஸல்மான் வியந்து விட்டார். தங்களைத் தூதுவனாக அனுப்பி வைத்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக நானும் அலீயும் கடந்த ஐந்து வருடங்களாக பகலில் ஆடுகளுக்கு உணவு கொடுப்பதற்குப் பாவிக்கும் ஆட்டுத் தோலையே இரவில் எங்களது படுக்கையாகப் பயன்படுத்துகிறோம். அதன் உரோமங்களிலிருந்தும் ஈச்ச ஓலைகளில் இருந்தும் பின்னப்பட்ட தலையணைகளையும் வைத்திருக்கிறோம்" என்றார்.

அதற்கு நபியவர்கள். "அன்பர் ஸல்மானே, என் மகள் பாத்திமா அல்லாஹ்வுக்கு மிக நெருங்கிய அடியார்களில் ஒருவராவார்" எனக் கூறினார்கள்.

பின்னர் நபிகளாரின் அழுகைக்கான காரணத்தை விசாரித்தார் பாத்திமா. அதற்கு நபியவர்கள் சற்று முன்னர் ஹஸ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ் ஸலாம் கொண்டு வந்த திருக் குர்ஆன் வாக்கியத்தை ஓதிக் காண்பித்தார்கள். அதனைக் கேட்ட ஹஸ்ரத் பாத்திமாவும் தேமித் தேமி அழத் தொடங்கினார்கள். நரகத்தில் விழுபவனுக்குக் கேடு தான் என்று கூறிக் கொண்டே இருந்தார்கள்.

15. பட்டினியும் சுவனத்து உணவும்

ஹஸ்ரத் அபூ ஸயீத் அல் குத்ரீ அவர்கள் அறிவிப்பதாவது:
ஒரு நாள் பசி மேலிட்ட நிலையில் வீடு வந்த ஹஸ்ரத் அலீ, அன்னை பாத்திமாவிடம் சாப்பிடுவதற்கு ஏதும் உணவு கிடைக்குமா? என வினவினார்கள்.
அதற்கு அன்னையோ, "அல்லாஹ்வின் மீது சாட்சியாக, கடந்த இரண்டு நாட்களாக வீட்டில் உணவுப் பொருள் எதுவும் இல்லாத நிலையில் இருக்கிறோம்" என சங்கடத்தோடு கூறினார். "இதை ஏன் என்னிடம் ஏற்கனவே கூறவில்லை. ஏதாவது ஒரு வழி பார்த்திருப்பேனே" என்றார் அலீ.
"
உங்கள் மீது எந்த வேலையையும் திணிப்பதையிட்டும் நான் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் வெட்கப்படுகிறேன்" என்று பவ்வியமாகப் பகர்ந்தார் அன்னை.
அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்தவராக தன்னம்பிக்கையோடு சுடும் வெயிலைப் பொருட்படுத்தாமல் வெளியேறினார் அலீ.
நண்பர் ஒருவரை நாடிச் சென்று ஒரு தீனார் பணம் கடனாகப் பெற்றார். அதற்கு ஏதும் உணவுப் பொருள் வாங்கிக் கொண்டு வீடு செல்லலாம் என்ற எண்ணத்தில் கடைத் தெருப் பக்கம் நடக்கலானார்.
அப்போது, அந்தக் கடும் வெப்பத்தையும் கவனிக்காது சோர்ந்த முகத்துடன் பாதையில் வந்து கொண்டிருந்த மிக்தாத் இப்னுல் அஸ்வத் என்ற தோழரைக் கண்ணுற்று, அவரை நெருங்கி, உருக்கும் இந்த வெயிலில் உம்மை வெளியேறச் செய்தது எது? என அன்போடு விசாரித்தார்.
தயவு செய்து என்னைத் தனியாக விட்டு விடுங்கள். என்னிடம் எதையும் கேட்க வேண்டாம்’ என்றார் மிக்தாத். ஹஸ்ரத் அலீயோ அவரை விடவில்லை. பல முறை வற்புறுத்திய பின்னர் மிக்தாத் வேறு வழியின்றி தம் அவல நிலையை விளக்கினார்.
அல்லாஹ்வின் மீது சாட்சியாக, பசியின் கொடுமையினால் வாடி வதையும் மனைவி, குழந்;தைகளின் அழுகுரலைத் தாங்க முடியாமல் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வெளியேறினேன். அல்லாஹ் ஏதாவது வழிகாட்ட மாட்டானா என்ற ஆவல் தவிர வேறு ஒன்றும் கிடையாது’ என்றார்.
இதைச் செவியுற்ற அலீயின் கண்கள் பனித்தன. தன் சட்டைப் பையிலிருந்த ஒரு தீனார் நாணயத்தை மிக்தாதின் கையில் திணித்தவர் மஸ்ஜிதுன்னபியை நோக்கி நடையைக் கட்டினார்.
நபிகளாரின் பின்னால் நின்று ழுஹர் தொழுகையை முடித்தார். பின்னர் அஸரையும் தொழுதார். இரவுத் தொழுகையும் முடிந்தது. தொழுகை முடிய தம்மைச் சந்திக்குமாறு நபியவர்கள் ஹஸ்ரத் அலீக்கு சமிக்ஞை காட்டினார்.
மஸ்ஜிதுன்னபவியின் முன்கதவுக்கு அருகில் நபிகளாரைச் சந்தித்த அலீயிடம், ‘இரவுச் சாப்பாட்டுக்கு தங்கள் வீட்டுக்கு வரலாம் என்று உள்ளேன். அனுமதியுண்டா?| எனக் கோரினார்கள். வீட்டு நிலைமை பற்றி நன்கு தெரிந்திருந்த அலீ என்ன சொல்வதென்று புரியாமல் வெட்கத்தால் தலைகுனிந்தார்.
ஹஸ்ரத் அலீ கடன் வாங்கிய தீனாரைத் தருமம் செய்து விட்டு பட்டினியில் இருக்கும் செய்தியை ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அண்ணலாருக்கு அறிவித்திருந்தார்.
வீட்டில் உணவு கிடையாது என்று நபிகளாரிடம் சொல்வது எவ்வாறு? தங்களது வருகை எங்களுக்குப் பாக்கியமே இறை தூதரே எனக் கூறி நபிகளாரை தம் வீட்டுக்கு விருந்துண்ண அழைத்துச் சென்றார்கள்.
வீட்டை அடைந்த போது அன்னை பாத்திமா அப்போது தான் தொழுகையை முடித்துக் கொண்டிருந்தார்கள். நபியவர்களது வருகையை அறிந்ததும் உடனடியாக எழுந்து சென்று வரவேற்றார்கள்.
"
அன்பு மகளே, இன்றைய நாள் உங்களுக்கு எப்படிக் கழிந்தது. உங்களுக்கு அல்லாஹ் அருள் பாலிப்பானாக. இரவு உணவுக்காக ஏதும் இருந்தால் பரிமாறுங்கள்" எனக் கூறினார்கள்.
ஹஸ்ரத் அலீ மிகவும் சங்கடப் பட்டவராகக் காணப்பட்டார். அன்னையோ மிக்க மகிழ்ச்சியோடு எழுந்து சென்று அடுப்பின் மீது கிடந்த அறுசுவை உணவைக் கொண்டு வந்து தமது தந்தையினதும் கணவரினதும் முன்னால் வைத்து உணவருந்த அழைத்தார்கள்.
ஹஸ்ரத் அலீயின் திகைப்பு பன்மடங்காகியது. என்ன நடக்கிறது என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. தம் அருமை மனைவியிடம், "இறைதூதரின் மகளே, இந்த உணவு எங்கிருந்து கிடைத்தது? இவ்வளவு சுவையும் நறுமணமும் உள்ள உணவை நான் என்றும் கண்டதில்லையே" என பரிவோடு வினவினார், வியப்புக் கலந்த நிலையில்.
அண்ணல் நபியவர்கள், ஹஸ்ரத் அலீயின் முழங்காலில் தம் கையை வைத்துச் சொன்னார்கள். "இது நீர் இன்று செய்த தர்மத்துக்க அல்லாஹ் தந்த கைம்மாறு. அல்லாஹ் தாம் விரும்பியவருக்கு தாராளமாக உணவளிக்கிறான்"
ஆனந்தக் கண்ணீர் மேலிட்டவர்களாக நபியவர்கள் தொடர்ந்து சொன்னார்கள். "நீங்கள் செய்யும் நற்காரியங்களின் பிரதிபலனை உலகிலேயே அனுபவிக்கும் பாக்கியத்தை உங்களுக்குத் தந்த அல்லாஹ்வைப் புகழ்கிறேன். ஹஸ்ரத் ஸகரிய்யா அவர்கள் ஹஸ்ரத் மர்யமிடம் செல்லும் போதெல்லாம் அவருக்கு அருகில் உணவுத் தட்டுகள் இருப்பதைக் கண்டார் என்று குர்ஆன் கூறுவது போலத் தான் உங்கள் கதையும் இருக்கிறது."

16. ஒரு மாலையின் கதை

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அன்சாரி சொல்கிறார்:
ஒரு நாள் மாலை நேரம் அஸர்த் தொழுகைக்குப் பிறகு நாம் நபியவர்களின் சந்நிதானத்தில் அமர்ந்திருந்தோம். அப்பொழுது, வயோதிபர் ஒருவர் அழுக்குப் படிந்த ஆடையோடு அங்கு வந்தார். முதுமையின் பலவீனம் காரணமாக அவரால் ஒழுங்காக அமரக் கூட முடியவில்லை. நபியவர்கள் அவரிடம் சுக நலம் விசாரித்தார். அதற்கு வயோதிபர்,‘அல்லாஹ்வின் தூதரே, நான் பசியோடு வாழ்கிறேன். எனக்கு ஏதும் உணவு தாருங்கள். ஆடையின்றி இருக்கிறேன். உடுக்க ஏதும் கொடுத்து விடுங்கள். ஏழை. எதுவுமற்ற பரம ஏழை. ஏதாவது கொடுத்து உதவுங்கள்’என முறையிடலானார்.
உமக்குத் தருவதற்கு என்னிடம் தற்போதைக்கு எதுவும் கிடையாது. ஆகையால் எதுவும் தரக் கூடிய ஒருவரிடம் அனுப்பி வைக்கிறேன்’ எனக் கூறி, ஹஸ்ரத் பிலாலுடன் அவரை பாத்திமாவின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
அன்னை பாத்திமாவின் வீட்டு வாசலுக்கு வந்த வயோதிபர் உரத்த குரலில்: ‘நபிகளாரின் குடும்பத்தினரே, மலக்குமார் வந்து போகும் வீட்டைச் சேர்ந்தோரே, வஹீ இறங்குகின்ற இடத்தில் உள்ளோரே உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்’என்றார்.
அன்னையும் அவரது சலாத்துக்குப் பதில் சொல்லி சுகம் விசாரித்தார்கள்.
அன்னையே, நான் ஒரு பரம ஏழை. தங்கள் தந்தையிடம் உதவி கோரி வந்தேன். தங்களிடம் என்னை அனுப்பி வைத்தார். ஒழுங்கான உணவின்றி ஆடையின்றி வறுமையில் ரொம்பவும் வாடுகிறேன். ஏதும் இருந்தால் கொடுத்து உதவுங்கள். இறைவன் தங்களுக்குக் கருணை புரிவான்’ என்றார் வயோதிபர்.
அன்றைய தினம் அன்னை பாத்திமாவும் ஹஸ்ரத் அலீயும் அண்ணல் நபிகளும் ஒழுங்காக உணவு உட்கொண்டு மூன்று நாட்களாகியிருந்தது. நபிகளாரும் இதனை அறிந்தே இருந்தார். அன்னையார், வீட்டில் ஒரு முறை சுற்றிப் பார்த்தார். சிறுவர்களான ஹஸனும் ஹுஸைனும் இரவில் தூங்குவதற்குப் பயன்படுத்திய பதனிடப்பட்ட ஆட்டுத் தோல் மட்டுமே கிடைத்தது. அதனைப் பரிவோடு வயோதிபரிடம் கொடுத்து விட்டு அவருக்காகப் பிரார்த்தித்தார்கள்.
ஆயினும் வயோதிபரோ, ‘நபிகளாரின் புத்திரியே, என் கஷ்டங்களை தங்களிடம் சமர்ப்பித்தேன். இந்த ஆட்டுத் தோலால் நான் என்ன தான் செய்ய முடியும்?’ எனக் கூறினார்.
அதனைச் செவிமடுத்த அன்னை, தமது கழுத்தில் அணிந்திருந்த மாலையைக் கையில் எடுத்தார். அது ஹஸ்ரத் ஹம்ஸாவுடைய மகள் பாத்திமா அன்பளிப்பாக அன்னையாருக்கு வழங்கியிருந்தார். அதனை அந்த மனிதரிடம் கொடுத்து, ஷஇதனை விற்று உன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும். இதனை விடச் சிறந்த ஒன்றை அல்லாஹ் உமக்குத் தரப் பிரார்த்திக்கிறேன்’எனக் கூறி அனுப்பி வைத்தார்கள்.
மஸ்ஜிதுன்னபவிக்கு மீண்டு வந்த வயோதிபர் நபிகளாரிடம் நடந்தவற்றை விளக்கிச் சொன்னார். நபிகளாரின் கண்கள் பனித்தன. "மாதர்க்கரசி பாத்திமாவின் கொடையல்லவா, நிச்சயமாக அல்லாஹ் உமது தேவைகளை மிகச் சிறப்பாக நிறைவேற்றி வைப்பான்" என அண்ணலார் அவருக்கு வாழ்த்துக் கூறினார்கள்.
அங்கு பிரசன்னமாகியிருந்த அம்மார் பின் யாசிர் (றழி) தாமே அம் மாலையை விலை கொடுத்து வாங்க நபிகளாரின் அனுமதியைக் கோரி நின்றார்.
அதற்கு நபியவர்கள், "அம்மாரே அதனை வாங்கிக் கொள். ஏனெனில் அதில் சம்பந்தப்படுகின்ற எவரையும் அல்லாஹ் நரகத்தில் வேதனை செய்ய மாட்டான்" என்றார்கள்.
அம்மனிதரும், "எனது பசியைப் போக்க கோதுமையும் இறைச்சியும் உடுப்பதற்கும் தொழுகைக்குமாக ஒரு யெமன் தேசத்;து ஆடையும் வீடு சென்றடைவதற்கு வழிச் செலவும் கிடைத்தால் போதுமானது, இதனை விற்று விடுவேன்"என்றார்.
கைபர் யுத்தத்தில் கனீமத் கிடைத்ததில் ஓரளவு பணம் அம்மாரிடம் இருந்தது. "இந்த மாலைக்குப் பகரமாக 20பொற்காசுகளும் 200 வெள்ளிக் காசுகளும் போதிய அளவு கோதுமையும் இறைச்சியும் பயணம் செய்வதற்காக ஓர் ஒட்டகையும் தருகின்றேன்" என்றார் அம்மார்.
எவ்வளவு பெருந் தன்மையான மனிதர் நீங்கள் என்று வியந்த வயோதிபர் அம்மாருடன் கடை வீதி நோக்கிச் சென்றார். வாக்களித்த பிரகாரம் பொருட்களை அம்மனிதருக்கு வாங்கிக் கொடுத்தார் அம்மார்.
மீண்டும் நபியவர்களிடம் வந்த வயோதிபரிடம் உமது தேவைகள் நிறைவேறிவிட்டனவா எனக் கேட்டார் நபிகளார்.
"
என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நிறைவேறி விட்டன நாயகமே" என்றார் வயோதிபர்.
"
அப்படியாயின் உமக்குச் செய்த உதவிக்காக பாத்திமாவுக்காக துஆச் செய்யுங்கள்" என நபிகளார் கோர, "இறைவா,இதுவரைக்கும் எந்தக் கண்ணும் காணாத, எந்தக் காதும் கேளாத நற்பேறுகளை பாத்திமாவுக்கு வழங்குவாயாக" எனப் பிரார்த்தித்தார். நபியவர்கள் ஆமீன் சொன்னார்கள்.
பின்னர் தம்மோடு அமர்ந்திருந்தவர்களிடம் அன்னை பாத்திமாவின் சிறப்புகளை விளக்கிக் கூறலானார்கள். ‘கபுறில் இரண்டு மலக்குகள் தோன்றி கேள்வி கணக்கு கேட்கும் போது, உமது நபி யார்? என்று கேட்டால், எனது தந்தை என்று கூறுவார்கள். நீர் வழிப்பட்ட இமாம் யார்? எனக் கேட்டால் இதோ என் கபுறுக்கு அருகில் நின்று கொண்டிருக்கிறாரே அலீ, அவர் தான் என்று கூறுவார்கள்’ என்றெல்லாம் நபியவர்கள் விபரிக்கலானார்கள்.
வீட்டுக்கு வந்த அம்மார் (றழி) அவர்கள், மாலையை கஸ்தூரியில் துவைத்தெடுத்து யமனிய துணியில் சுற்றினார். பின்னர் தமது அடிமையிடம் அதனைக் கொடுத்து, "இதனைக் கொண்டு சென்று நபிகள் பெருமானிடம் கையளித்து விடு. உம்மையும் அவர்களுக்கே உரிமையாக்கி விட்டேன்" எனக் கூறி அனுப்பினார்கள்.
நபியவர்களிடம் மாலையைக் கொடுத்து விடயத்தைச் சொன்னான் அடிமை. ‘இதை அப்படியே கொண்டு சென்று பாத்திமாவிடமே கையளிப்பீராக. நீயும் அவருக்கே சொந்தம்| என பாத்திமாவிடமே அனுப்பி வைத்தார்கள் அண்ணலார்.
அன்னை பாத்திமாவின் வீட்டுக்குச் சென்றான் அடிமை. மாலையைப் பெற்றுக் கொண்ட அன்னை, அடிமையை விடுதலை செய்து விட்டார். அடிமையின் முகத்தில் சிரிப்புத் தோன்றியது. காரணத்தைக் கேட்டார்கள் அன்னை.
அடிமை சொன்னான். "அன்னையே, இந்த மாலையின் பரக்கத்தை எண்ணி நான் சிரிக்கலானேன். இது ஒரு ஏழையின் தேவைகளை நிறைவேற்றியது. பசியாளிக்கு உணவு வழங்கியது. ஆடையில்லாதவனுக்கு ஆடை வழங்கியது. ஓர் அடிமையை விடுதலை செய்தது. இறுதியில் அதன் சொந்தக் காரரின் கைகளுக்கே திரும்பி வந்துள்ளது

17. ஒளி வீசிய ஆடை

இமாம் அலீ ஒரு முறை ஒரு யஹுதியிடம் ஒரு தொகை கோதுமை கடனாக வாங்கியிருந்தார். அடமானமாக ஏதாவது ஒரு பொருளைத் தருமாறு அவர் கோரினார். அன்னை பாத்திமாவுக்குச் சொந்தமான மேலங்கியொன்றை இமாம் அவரிடம் வழங்கியிருந்தார்.
அன்று இரவில் அந்த ஆடை வைக்கப் பட்டிருந்த அறைக்குத் தற்செயலாகச் சென்ற அந்த யஹுதியின் மனைவி,பூரணச் சந்திரன் தம் வீட்டுக்குள் வந்து விட்டது போன்ற ஒரு பிரகாசத்தை தம் அறையில் கண்டு வியப்புற்று கணவனிடம் ஓடிச் சென்று விபரத்தைச் சொன்னார்.
பின்னர் இருவருமாக அறைக்குச் சென்று நன்கு அலசிப் பார்த்த போது ஹஸ்ரத் அலீ கொடுத்த ஆடையிலிருந்தே ஒளி வீசுவதைக் கண்ணுற்றனர். தம் அயலார் மற்றும் உறவினர்களுக்கும் இந்த அற்புதத்தை அவர்கள் காட்டினர். அவர்களில் பலர் பின்னர் இஸ்லாத்தில் இணைவதற்கு இச்சம்பவம் காலாக அமைந்தது.

18. உதவிக்கு விரைந்த விண்ணவர்

ஹஸ்ரத் அபூதர் (றழி) அவர்கள் கூறுகிறார்கள்:
ஒரு முறை ஹஸ்ரத் அலீயை அழைத்து வருமாறு அண்ணல் நபியவர்கள் என்னை அனுப்பி வைத்தார்கள். நான் அவர்களது வீட்டு வாசலில் நின்று கொண்டு ஹஸ்ரத் அலீயை அழைத்தேன். அவர்கள் பதில் கூறவில்லை. வீட்டினுள் இருந்த மாவரைக்கும் திரிகை தானாகவே சுற்றிக் கொண்டிருந்தது. அருகில் எவரும் இருப்பதாகத் தெரியவல்லை.
மீண்டும் அழைத்த போது ஹஸ்ரத் அலீ வெளியே வர நபியவர்களிடம் அழைத்துச் சென்றேன். இருவரும் எதையோ பேசிக் கொண்டார்கள். அப்போது நான் தானாக இயங்கும் திரிகையைப் பற்றி விசாரித்தேன். அதற்கு பெருமான் நபியவர்கள் சொன்னார்கள்:
எனது மகள் பாத்திமாவின் உள்ளமும் உடம்பும் கூட இறையச்சத்தாலும் இறை நேசத்தாலும் நிறைந்துள்ளது. அவரது நிலைமையை அறிந்து அல்லாஹ் அவருக்கு உதவி செய்கின்றான். அபூதரே! முஹம்மதுடைய குடும்பத்தினருக்கு உதவி செய்வதற்காக இறைவன் சில விண்ணவர்களை ஏவியுள்ளான் என்பது தெரியாதா?
| .

19. இறைவன் மெச்சிய தர்மம்
பொதுவாக ஷியா மற்றும் ஸுன்னா றாவிகள் இச் சம்பவத்தை அறிவிக்கின்றார்கள். அமீருல் மூமினீன் அலீ, அன்னை பாத்திமா, ஹஸன், ஹுஸைன் மற்றும் பணிப் பெண் பிழ்ழா ஆகிய அனைவரும் ஏற்கனவே செய்த நேர்ச்சையின் பிரகாரம் நோன்பு வைத்தனர்.
முதலாம் நாள் இப்தாரின் போது வந்த ஏழை உண்பதற்கு ஏதாவது கொடுக்க் கோரவே தயாரித்து வைத்திருந்த சிறிதளவு உணவை அவருக்குக் கொடுத்து விட்டு வெறும் தண்ணீரைக் குடித்து நோன்பு துறந்தார்கள். இரண்டாவது நாளும் மூன்றாவது நாளும் கூட அவ்வாறே நடந்தது.
அப்போது இறைவன் புறத்திலிருந்து ஹல் அதா அலல் இன்ஸானி எனத் துவங்கும் சூறா இறங்கலாயிற்று. அதில் இவர்களது பெருந் தன்மையை மெச்சிய அல்லாஹ், "அல்லாஹ்வின் மீது கொண்ட அன்பின் காரணமாக ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் சிறைப்பட்டவர்களுக்கும் அள்ளி வழங்குகின்றார்கள்" என அஹ்லுல் பைத்தினரைப் பற்றி சிலாகித்துள்ளான். (இச்சம்பவம் பற்றிய மேலதிக விளக்கத்துக்கு ஸமஹ்ஷரியின் தப்ஸீர் கஷ்ஷாப் பார்க்கவும்)

20. அஹ்லுல் பைத்தினரின் பரிசுத்தம் 


பொதுவாக ஷீயா முபஸ்ஸிர்களும் ராவிகளும் மற்றும் பெரும்பாலான சுன்னத் ஜமாஅத் முபஸ்;ஸிர்களும் ஏகோபித்துக் கூறும் விடயம் என்னவெனில், ஆயத்துத் தத்ஹீர் எனப்படுகின்ற, "அல்லாஹ் விரும்புவதெல்லாம்,நபியின் குடும்பத்தினராகிய, உங்களிலிருந்து சகல குறைகளையும் நீக்கி உங்களைப் பரிசுத்தப்படுத்தவே ஆகும்" என்ற திருவசனம், அன்னை பாத்திமா மற்றும் இமாம்களான அலீ, ஹஸன், ஹுஸைன் ஆகியோர் சம்பந்தமாக இறங்கியதாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் குடும்பத்தினர் அஹ்லுல் பைத் என இவர்களே குறிக்கப்படுகின்றார்கள்.
மேற்குறிப்பிட்ட அஹ்லுல் பைத் நபியின் குடும்பத்தினர் சகல குறைகளிலிருந்தும் தூய்மை பெற்ற, அல்லாஹ்வின் புறத்தில் இருந்தே பரிசுத்தவான்களாக்கப்பட்டவர்கள் என்பதற்கு ஆதாரமாக குர்ஆன் விளக்கவுரையாளர்கள் இந்த ஆயத்தையே ஆதாரமாகக் கொள்கிறார்கள். அதனை உறுதிப்படுத்தும் வகையிலான றிவாயத்துகள் பலவும் இருப்பது கவனிக்கத்தக்கது. உதாரணத்துக்கு ஒன்றை இங்கு தருகின்றோம்.
நாபிஃ இப்னு அபீ ஹம்ரா அறிவிக்கின்றார்:
நான் மதீனாவில் சுமார் எட்டு மாதங்கள் தங்கியிருந்தேன். தினந்தோறும் சுபஹுத் தொழுகைக்காக வெளியில் வரும் பெருமானார் அவர்கள் நேராக அன்னை பாத்திமாவின் வீட்டு வாசலில் சென்று, "நபியின் அஹ்லுல் பைத்தினரே,உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக. தொழுகை நேரம் வந்துவிட்டது. நிச்சயமாக அல்லாஹ் விரும்புவதெல்லாம் அஹ்லுல் பைத்தினராகிய உங்களில் இருந்து குறைகளை நீக்கி தூய்மையாக பரிசுத்தப் படுத்தவேயாகும் எனக் குரல் கொடுப்பதை வழக்கமாகச் செய்து வந்ததைக் கண்ணுற்றேன்.||

21. முபாஹலாவில் கலந்து கொண்டோர்.

ஒரு விடயம் பற்றி விவாதம் பண்ணிய பின்னரும் இரு தரப்பினரும் தாம் சொல்வதே சரி எனத் தீர்க்கமாகக் கூறுகையில் முபாஹலாவுக்கு அழைப்பு விடுப்பது நபிமார்களுக்கு அனுமதிக்கப் பட்டிருந்தது. இருதரப்பினரும் தமது மனைவிமார், பிள்ளைகளுடன் தாமும் ஓரிடத்தில் சந்தித்து, தாம் சொல்வது பிழையாயின் இறைவன் சாபம் என் மீதும் குடும்பத்தினர் மீதும் உண்டாகட்டும் என சத்தியப் பிரகடனம் செய்வதையே முபாஹலா என்பர்.
ஹஸ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றி நஜ்ரான் கிறிஸ்தவர்கள் நபியவர்களுடன் விவாதம் புரியலாயினர். இறுதியில் கிறிஸ்தவர்கள், ஈஸா நபியவர்கள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே இருதரப்பினரும் முபாஹலா செய்வதாக முடிவாகியது.
அதன் பிரகாரம் நபியவர்கள், மகள் பாத்திமா, மருமகன் அலீ மற்றும் பேரப் பிள்ளைகளான ஹஸன் ஹுஸைன் ஆகியோர் சகிதம் பிரசன்னமாகினர். எனினும் கிறிஸ்தவர்கள் அதிலிருந்து வாபஸ் பெற்றனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களே நபியின் குடும்பத்தினர் என அழைக்கப்படுகின்றனர். இதில் அன்னாரது மனைவியர் அழைத்துச் செல்லப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

22. தந்தைக்காக விட்ட கண்ணீர்

அப்துல்லாஹ் இப்னு ஹஸன் என்பவர் அறிவிக்கிறார்:
ஒரு முறை நபி பெருமானார் மகள் பாத்திமாவைப் பார்க்கச் சென்றிருந்தார். தம்மிடம் இருந்த காய்ந்த ரொட்டித் துண்டைக் கொடுத்து தந்தையை உபசரித்தார் அன்னை. அதனைச் சாப்பிட்ட நபியவர்கள் அருமை மகளிடம் தான் மூன்று நாட்களுக்குப் பிறகு சாப்பிட்ட முதலாவது உணவு இது தான் எனக் கூறினார்கள்.
இதனைச் செவியுற்ற மங்கையர்க்கரசியால் தாங்கிக் கொள்ள முடியாத துக்கத்தால் வாய்விட்டே அழலானார்கள். அண்ணலார் தமது புனிதக் கரங்களால் மகளாரின் கண்ணீரைத் துடைத்து விட்டு ஆறுதல் சொன்னார்கள்.

23. நபியின் கண்ணியம்

அன்னை ஆயிஷா அறிவிக்கின்றார்கள்: பாத்திமா எப்போதாவது நபியவர்களிடம் வந்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் தமது இருப்பிடத்தில் இருந்து எழுந்து முன் சென்று மகளை வரவேற்பார்கள். அவரது நெற்றிப் பொட்டில் முத்தமிட்டு தமது இருப்பிடத்தில் அமர்த்திக் கொள்வார்கள். அதே போன்று பாத்திமாவைக் காண நபிகளார் வந்தாலும் ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக் கொள்வார்கள்.

24. மறைவு

தந்தையின் மறைவைத் தொடர்ந்து பாத்திமா நாயகி எதிர் நோக்க வேண்டியிருந்த பல்வேறு பிரச்சினைகள் அவருக்கு கடுமையான துயரத்தைத் தருவனவாக அமைந்தன. தந்தையின் பிரிவு, கிலாபத்தில் அஹ்லுல் பைத்தினர் புறக்கணிக்கப்பட்டமை, பதக் தோட்டம் பறிமுதல் செய்யப்பட்டமை போன்ற பல்வேறு பிரச்சினைகள் அவரை வாட்டின.
நபியின் மறைவின் பின்னர் அன்னை பாத்திமா கண்ணீரும் கவலையுமாகவே காணப்பட்டார். தமது தந்தையின் அடக்கஸ்தளத்துக்கு அடிக்கடி சென்று வந்தார். சுஹதாக்களின் அடக்கஸ்தளங்களை அடிக்கடி தரிசித்தார். வீட்டில் கூட கண்ணீர் விட்டு அழுவதாகவே நாட்கள் கழிந்தன. மதீனா நகர மக்களைக் கூட அன்னாரது இக்கவலை பெரிதும் பாதித்தது. ஹஸ்ரத் அலீ அவர்கள், ஜன்னத்துல் பக்கீயின் ஒரு புறத்தில் ஓலையால் கட்டடமொன்றை அமைத்துக் கொடுத்தார். காலையில் தம் குழந்தைகளுடன் அங்கு செல்லும் அன்னையார் மாலை வரை அழுதுகொண்டேயிருந்தார். இக்கட்டடம் பிற்காலத்தில் சோகத்தின் இடம் பைத்துல் அஹ்ஸான் என அழைக்கப்படலாயிற்று.
இந்த நிலை பல நாட்கள் தொடர அன்னையார் கடுமையாக நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்நதார்கள்.
ஒரு முறை அன்னையின் வேண்டுகோளின் பேரில் ஹஸ்ரத் பிலால் அதான் சொல்லலானார். அஷ்ஹது அன்ன முஹம்மதன் றஸூலல்லாஹ் என பிலால் சொன்னது தான் தாமதம் அன்னை மயக்கமுற்று வீழ்ந்தார். அதானை நிறுத்திய பிலால் தொடர்ந்து சொன்னால் அன்னையின் உயிருக்கே ஆபத்தாகி விடுமோ என்று அஞ்சினார்.
ஓயாத இன்னல்களையும் தாளாத துன்பங்களையும் எவ்வளவு காலம் தாங்க முடியும். இளம் பாத்திமா கடும் சுகவீனமுற்று படுத்த படுக்கையானார். அன்னையாரின் மறைவு நிகழ்ந்த தினம் பற்றி கருத்து வேறுபாடு நிலவுகின்றது. பொதுவான கருத்தின் பிரகாரம் ஹிஜ்ரி பதினோராம் ஆண்டு ஜமாதுல் அவ்வல் 13ம் நாள் அல்லது ஜமாதுல் ஸானி மூன்றாம் நாள் அதாவது நபிகளாரின் மறைவுக்கு 75 அல்லது 95 நாட்களுக்குப் பிறகு இச் சோகம் நடந்தது.
அன்னார் மீதும் அவரது தந்தை மீதும் கணவர், பிள்ளைகள் மீதும் அன்னோரது வழித்தோன்றல்கள் மீதும் ஸலாம் உண்டாவதாக. 

இக்கட்டுரையை படிப்பவர்களுக்கும் கண்ணீர் வரவில்லை என்றால்
அன்னை பாத்திமா நாயகியின் தியாகங்கள் நமக்கு விலங்கவில்லை
என்றுதான் கருதவேண்டும்.
அன்பின் சகோதர, சகோதரிகளே  இக்கட்டுரை மூலம் அடையக்
கூடிய படிப்பினைகள் எண்ணில் அடங்காதது. ஆகவே கண்ணீர்
வடித்து திரும்பத் திரும்ப வாசிச்சி நல்லுணர்வு பெற்றுக்கொள்ளவும்
அல்லாஹ் நமக்கும் இப்பாக்கியத்தை தந்தருள்வானாக ஆமீன்.