ஒருசில நாட்களுக்கு முன்புதான் ரமலான் பிறையைக் கண்டதுபோல் வெகு விரைவாக ரமலானின் 2 பத்துகளும் கடந்துவிட்டன. 20 நாட்களின் நோன்புகளையும் வழக்கம்போல் சிறப்பாகவும், சந்தோஷமானதாகவும், உற்சாகம் மிக்கதாகவும் ஆக்கித்தந்த வல்ல நாயன் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! இந்த ரமலானிலேயே அதிமுக்கியத்துவம் வாய்ந்த (மீதியுள்ள 10 நாட்களான) கடைசிப் பத்து நாட்களையும் அதன் மகத்துவமிக்க இரவுகளையும் மேலும் அதிகமதிகமான நல்ல அமல்களோடு சிறப்பித்து, நன்மைகளை வாரிக் கொள்வதற்கு அல்லாஹுதஆலா நம்மனைவருக்கும் உதவி செய்தருள்வானாக!
கடைசிப் பத்து நாட்களின் சிறப்பையும் மகத்துவத்தையும் அறிய "ரப்புல் ஆலமீன் தரும் ரமலான் பரிசு" என்ற இடுகையைப் பார்க்கவும். இப்போது இந்த கடைசிப் பத்தில் செய்யவேண்டிய இன்னொரு சிறப்பு வணக்கமான "இஃதிகாப்" பற்றிப் பார்ப்போம்.
"இஃதிகாஃப்" என்ற பொதுவான அரபி சொல்லுக்கு "தங்குவது" என்று சொல்லப்படும். மார்க்க அடிப்படையில் நாம் சொல்வதானால், அல்லாஹ்வுக்காக சில நாட்களை ஒதுக்கி, பள்ளிவாசலில் சென்று தங்கி, இறைவனிடம் நன்மைகளை எதிர்ப்பார்த்த நிலையில் இயன்றவரை அதிகமாக வணக்கங்கள் புரிவதை "இஃதிகாஃப்" என்கிறோம்.இஃதிகாஃப் இருப்பவர்கள் பெரும்பாலும் 21 வது இரவின் மக்ரிப் தொழுகைக்கு முன் ஆரம்பிக்கின்றனர். ஆனால் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடிக் கொள்ளும்படி நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (பார்க்க: புஹாரி 2027). மேலும் ஃபஜ்ரு தொழுதவுடன் நபி(ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்கத் துவங்குவார்கள் என்ற ஆதாரப்பூர்வமான செய்தியும் உள்ளது.
நபி(ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் ஃபஜ்ரு தொழுகையை முடித்துவிட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள்.
நூல்: முஸ்லிம் (2007)
அப்படியானால் ஃபஜ்ரு தொழுதவுடன் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள் என்றால், அது 21 ஆம் நாள் ஃபஜ்ராக இருக்க முடியாது. ஏனெனில் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடும் வாய்ப்பில் அந்த 21 ஆம் இரவு தவறிவிடும் வாய்ப்புள்ளதால், 20 ஆம் நாள் ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகுதான் நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃபை துவங்கி இருப்பார்கள் என்று நாம் விளங்குவதே பேணுதலாகவும், இரண்டு ஹதீஸ்களுக்கும் பொருத்தமாகவும் இருக்கும். ஆக, ரமலானில் இஃதிகாஃப் இருக்க விரும்புபவர்கள் 20 ஆம் நாள் காலை ஃபஜ்ரு தொழுகையை முடித்துவிட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்றுவிட வேண்டும்.
இஃதிகாஃபின் முடிவு நேரம்
அபூஸயீத்(ரலி) அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள். இருபதாம் நாள் முடிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
நூல்: புஹாரி (2018)
நபி(ஸல்) அவர்கள் நடுப்பத்தில் இஃதிகாஃப் இருக்கும்போது இருபதாம் நாள் முடிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தங்கள் வீட்டிற்கு செல்வார்கள் என்ற ஹதீஸிலிருந்து கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருப்பவர்கள் 29 ஆம் நாள் முடிந்து அல்லது 30 ஆம் நாள் முடிந்து மாலையாகி, ஷவ்வால் மாதம் துவங்கும் இரவில் வீடு திரும்பலாம் என்ற வழிமுறை நமக்கு கிடைக்கிறது.
ஆக இஃதிகாஃப் இருப்பவர்கள், ரமலான் மாதத்தின் பிறை 29 ல் அந்த மாதம் முடிந்து ஷவ்வால் பிறை தென்பட்டாலோ அல்லது ரமலான் பிறை 30 ஆக பூர்த்தியடைந்த பிறகோ அன்றைய மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இஃதிகாஃபை முடித்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பிவிடலாம். ஆனால் பெருநாள் தொழுகையை முடித்து விட்டுதான் வீடு திரும்பவேண்டும் என்று சிலர் கூறுவதற்கு நபிமொழிகளில் ஆதாரங்கள் எதுவுமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக