புதன், 4 செப்டம்பர், 2013

துஆக்களின் சிறப்பு ,

அஸ்ஸலாமு  அழைக்கும்.(வரஹ்.....)
 இறைவனிடம்   கை   ஏந்துங்கள்,                                                              
      நாம்  இறைவனின்  தியானத்தை  தவிர  வேறு  எதிலும் மன  அமைதி  காண  முடியாது .
     அல்லாஹ்வை  நினைவு  கூர்வதை  கொண்டுதான்  இதயங்கள்  அமைதி  பெறுகின்றன
      அல்லாஹ்வை  உள்ளத்தாலும்,நாவினாலும்,தனித்தனியே  தியானம் செய்யலாம் என்றாலும, உள்ளமும்,நாவும்,சேர்ந்து முழு  மனதோடு  கேட்கப்படும்  துஆ  தான் அல்லாஹ்விடத்தில் ஏற்று கொள்ளப்படும்.
     அல்லா  கேட்டதையே  கொடுக்கின்றான் . அல்லது அதைவிட  
சிறந்ததை  கொடுக்கின்றான். அல்லது  அந்த  துஆவைக்   கொண்டு வர 
இருக்கின்ற ஆபத்தை நீக்குகின்றான் என ரசூல்{ஸல்}அவர்கள் கூறினார்கள்.
       நாம்  துஆ  செய்யும்போது இரு கைகளையும்  தோல்,புஜம் வரை உயர்த்தி  முகத்திற்கு நேராக வைக்க வேண்டும்.கிப்லாவை நோக்கி துஆ 
செய்வது சிறந்தது.துஆ கேட்பதற்கு முன் அல்லாஹ்வை புகழவேண்டும்.
பின்  ரசூல்{ஸல்}அவர்களின் மீது சலவாத் ஓத வேண்டும்.பின் மிகவும் 
தாழ்மையுடனும்,அச்சத்தோடும் துஆ கேட்கவேண்டும் .
        துஆ முடிந்த பிறகு மீண்டும் அல்லாஹ்வை புகழ்ந்து,பின்  
ரசூல்{ஸல்}அவர்களின் மீது சலவாத் ஓதி,ஆமீன் கூறி தம் இரு கைகளையும் முகத்தில் தடவி கொள்ளவேண்டும்.
        அடியான் கையேந்தி அல்லாஹ்விடத்தில் துஆ கேட்ட பிறகு 
        அவனை வெறும் கையோடு அனுப்புவதற்கு அல்லா 
        வெட்கப்படுகிறான் என்று ரசூல்{ஸல்}கூறியுள்ளார்கள் .  

 சில நேரங்களில் செய்யப்படுகின்ற துஆ ஏற்று கொள்ளப்படுகின்றது .அவற்றில் சில கீழே எழுதப்பட்டு உள்ளன .மனதில் வைத்து கொள்ளவும்.
  1. பாங்கிற்கும் , இகாமத்திற்கு இடையில்   கேட்கப்படும்  துஆ ,
  2.  பர்ளு  தொழுகைக்குப்பின்  கேட்கப்படும்  துஆ 
  3.  தஹஜ்ஜ்த்  தொழுகைக்குப்பின்  கேட்கப்படும்  துஆ 
  4. சஜ்தாவில்   கேட்கப்படும்  துஆ 
  5. நோன்பு   திறக்கும்  முன்   கேட்கப்படும்  துஆ .  

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

பல்வேறு விதமான சோதனைகளும் அதன் பயன்களும்

இறைவன் தனக்கென வடிவமைத்துள்ள வழிமுறைகளுக்கு அமைவாகவே இந்த உலகின் அனைத்து செயற்பாடுகளையும் இயக்கிக் கொண்டிருக்கின்றான். அந்த வகையில் மனிதர்களை மாறி மாறி பல்வேறு முறைகளில் சோதிப்பதும் அவனின் வழிமுறையாகும். இந்த உலகில் மனிதர்கள் நிம்மதி, சந்தோசம், பிரச்சினைகள், சிக்கல்கள் என என்னிலையில் வாழ்ந்தாலும் அனைவரும் அவரவருக்கென இறைவன் விதித்தபடி சோதிக்கப் படுகிறார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்வது அவசியமாகும். எனவே ஏழ்மை, கஷ்டம் மற்றும்  நோயில் வாழ்கிற ஒருவரும் செல்வ செளிப்புடன் ஆரோக்கியமாக வாழும் ஒருவரும் முறையே சோதிக்கப் பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அவ்விருவரிடையே இவ்வாறான நிலைமைகளை மாறி மாறி வரச் செய்வதும் இறைவனின் வழிமுறையாகும். சிலருக்கு இறைவன் குடும்பம் குழந்தைகளை கொடுத்தும் சோதிப்பான், சிலரை தனிமை படுத்தியும் சோதிப்பான். ஆக இந்த உலக வாழ்க்கை முழுவதும் சோதனைக்கான காலமாகும். இந்த உண்மைகளையே பின்வரும் இறைவசனங்கள் தெளிவு படுத்துகின்றன.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல் குர்ஆன் 21:35)
உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான்; ஆனால் அல்லாஹ் – அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது. (அல் குர்ஆன் 64:15)
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல் குர்ஆன் 2:155(  
இந்த உலகையும் அதன் செயற்பாடுகள் அனைத்தையும் மனிதர்களுக்காக படைத்த இறைவன் இவ்வாறு அவன் மனிதர்களை சோதிப்பதிலும் பல   நன்மைகளை அவர்களுக்காக ஏற்படுத்தி வைத்துள்ளான். அதனை அவ்வப்போது அவர்கள் புரிந்து கொள்ளாத போதும் எதிர் காலத்தில்  தெளிவு பெற வாய்ப்புள்ளது. பல்வேறு சந்தர்பங்களில் எத்தனையோ உபதேசங்கள், போதனைகள்  மூலம் ஏற்படாத தாக்கங்கள், மாற்றங்கள், படிப்பினைகள், தெளிவுகளை எல்லாம் ஓரிரு சோதனைகள், கஷ்டங்கள் மூலம் மனிதர்கள் அடைந்து கொள்வதை எமது வாழ்வில் காண்கிறோம். அவ்வாறு ஏற்படும் சில சோதனைகள் மற்றும் அதன் மூலம் மனிதர்கள் பெரும் பயன்களை பின்வருமாறு இஸ்லாம் தெளிவு படுத்துகிறது.
மனிதர்கள் உணர்ந்து திருந்துவதற்கான சோதனை 
மனிதர்கள் இறைவனை மறந்து, அவனின் கட்டளைகளை துறந்து வாழும் போது அவர்கள் உணர்வு பெற்று, இறைவனை ஞாபகப் படுத்தி, அவனின் பால் பணிந்து மீண்டு வருவதற்காகவும் இறைவன் மனிதர்களை சோதிப்பான் என்ற செய்தியை பின்வரும் இறைவசனங்கள் தெளிவு படுத்துகின்றன.
மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான். (அல் குர்ஆன்  30:41)  
நாம் நபிமார்களை அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம் மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை. (அல் குர்ஆன்  7:94(
(நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூகத்தாருக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பினோம்; அச்சமூகத்தாரை நோயைக் கொண்டும் வறுமையைக் கொண்டும் பிடித்தோம் அவர்கள் பணிந்து வரும் பொருட்டு. (அல் குர்ஆன்  6:42)
அவர்களை நாம் பூமியில் பல பிரிவினராகச் (சிதறித்திரியுமாறு) ஆக்கி விட்டோம்; அவர்களில் நல்லவர்களுமிருக்கிறார்கள். அதுவல்லாத கெட்டவர்களும் இருக்கின்றார்கள் – அவர்கள் (நன்மையின் பால்) திரும்பும் பொருட்டு அவர்களை நன்மைகளைக் கொண்டும், தீமைகளைக் கொண்டும் சோதித்தோம். (அல் குர்ஆன் 7:168)
இப்படியாக இறைவன் சோதனைகளை இறக்கியும் உணர்வு பெற்று திருந்தாதவர்களுக்கு உலகின் சில இன்பங்களை அனுபவிக்கச் செய்து விட்டு பிறகு தண்டனையை இறக்கி அவர்களை வேரறுத்து விடுகிறான் என்ற உண்மையை இறைவன் எமக்கு பின்வருமாறு புரிய வைக்கின்றான்.
நம்மிடமிருந்து அவர்களுக்கு வேதனை வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? அதற்கு மாறாக அவர்களுடைய இருதயங்கள் இறுகிவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டிவிட்டான். (அல் குர்ஆன்  6:43)
அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் – பின்னர், அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை (நம் வேதனையைக் கொண்டு) அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம்; அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர். (அல் குர்ஆன்  6:44)
எனவே, அக்கிரமம் செய்து கொண்டிருந்த அக்கூட்டத்தார் வேரறுக்கப்பட்டனர்; “எல்லாப் புகழும் உலகங்கள் யாவற்றுக்கும் இரட்சகனான அல்லாஹ்வுக்கே ஆகும்.” (அல் குர்ஆன்  6:45)
இதே அடிப்படையில் தான் தன்னை முற்றிலும் நிராகரித்து வாழ்கிறவர்களுக்கு இறைவன் உலக பாக்கியங்களை வழங்குகிறான். இதனைப் பார்த்து உண்மை விசுவாசிகளான நாம் ஏமார்ந்து விடக் கூடாது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு நிராகரிப்பாளன் ஏதேனும் ஒரு நனமையை செய்தால், அதன் பிரதி பலனை அவனுக்கு உலகிலேயே அல்லாஹ் கொடுத்து விடுகிறான். அதே நேரத்தில் ஒரு முஃமின் செய்யும் நன்மைகளுக்கான பலனை மறுமைக்காக இறைவன் சேமித்து வைக்கின்றான். மேலும் இவ்வுலகிலே அந்த முஃமினுக்காக இறைவன் அவனை வழிப்படுவதற்கான வாழ்வாதாரத்தையும் (றிஸ்க்) வழங்குகிறான். (முஸ்லிம்)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறை நம்பிக்கையாளரின் நிலையானது, இளம் பயிர் போன்றதாகும். காற்றடிக்கும்போது அதைக் காற்று (தன் திசையில்) சாய்த்துவிடும். காற்று நின்றுவிட்டால், அது நேராக நிற்கும். சோதனையின்போது (இறை நம்பிக்கையாளரின் நிலையும் அவ்வாறே). தீயவன், உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதொரு மரத்தைப் போன்றவன். அல்லாஹ், தான் நாடும்போது அதை (ஒரேடியாக) உடைத்து (சாய்த்து) விடுகிறான்.
(அறிவிப்வர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி).
உண்மையாளர்களையும் பொய்யர்களையும் பிரித்தரிவதற்கான சோதனை   
இறை விசுவாசியைப் போன்று  நமது நண்பர்களாக நேர்மையான வர்களாக நடித்துக் கொண்டு உள்ளத்தில் நயவஞ்சகத்தையும், குரோதத்தையும் மறைத்து வைத்துக் கொண்டு எம்முடன் ஒன்றர கலந்து வாழ்கிற எத்தைனையோ எதிரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் தமக்குள் மறைத்து வைத்திருக்கும் விஷத்தை கக்கி முஸ்லிம்களை அழிக்க தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.  இவர்களின் முகத்திரைகளை களைந்து அவர்களின் உண்மை முகத்தை அம்பலப் படுத்துவதற்காகவும் இறைவன் மனிதர்களை சோதிப்பான். இதன் மூலம் உண்மையான இறைவிசுவாசி யார்? நயவஞ்சகர்களான இஸ்லாத்தின் எதிரிகள் யார்? என்பதை புரிந்து கொள்ளலாம். இப்படியான கயவர்களை எத்தனையோ சோதனைகள், பிரச்சினைகளின் போது தான்  நாம் தெரிந்து கொண்டுள்ளோம்.  இதனையே பின்வருமாறு அல் குர்ஆன் தெளிவுபடுத்துகிறது :
 “நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?
நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் – ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான். (அல் குர்ஆன்  29: 2,3 )
(காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை; இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை; ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு. (அல் குர்ஆன்  3:179)
நல்லடியார்களை தூய்மைப் படுத்தி  உயர்வைப் பெற்றுத் தருவதற்கான சோதனை 
இறைவனின் அன்பிற்குரிய நல்லடியார்களை அவர்களின் பாவங்களை மன்னித்து தூய்மைப் படுத்தி அவர்களுக்கு மேலதிக அந்தஸ்தத்தையும், உயர்வையும் பெற்றுக் கொடுத்து மனித புனிதர்களாக மாற்றுவதற்காகவும் இறைவன் சோதிப்பான். இவர்கள்  மற்றவர்களை விடவும் சற்று அதிகமாகவே சோதிக்கப் படுவார்கள். இந்த அடிப்படையில் தான் இஸ்லாத்தை தமது வாழ்வு நெறியாக ஏற்று அதனை முழுமையாக பின்பற்றி வருகிற உண்மை முஸ்லிம்கள் சோதிக்கப் படுகின்றார்கள். இவர்கள் ஏனையோரை விடவும் அதிகமான சவால்கள், பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வருவது கண்கூடானதாகும்.  இவ்வாறான சோதனைகளின் போது அல்லாஹ்வுக்கு முற்றிலும் அஞ்சி மேலும் தமது ஈமானைப் பலப் படுத்திக் கொண்டு  பொறுமையை கடைப் பிடித்து வாழும் போது இறைவன் அவர்களின் பாவங்களை மன்னித்து, அவர்களுக்கு  உன்னத அந்தஸ்தத்தையும், உயரிய நன்மைகளையும் பெற்றுக் கொடுக்கின்றான்.  இந்த விபரங்களையே பின்வரும் திரு வசனம், மற்றும் செய்திகள் உணர்த்துகிறன.
 (முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். (அல் குர்ஆன்  3:186)
இறைவன் யார் மீது நலவை நாடுகிறானோ அவரை (பல வழிகளிலும்) சோதிப்பான் என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: அபூ ஹுரைராஹ் (ரழி), நூல்: புகாரி)  
ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் “யா ரசூலல்லாஹ்! மனிதர்களில் அதிகம் சோதிக்கப் படுகிறவர்கள் யார்?” என வினவினேன். அதற்கு அவர்கள்: “நபி மார்கள், அதற்கு பிறகு அடுத்தடுத்த அந்தஸ்தில் உள்ளவர்கள், ஒவ்வொருவரும் அவர்களின் மார்க்க பற்றுதலுக்கு அமைவாகவே சோதிக்கப் படுவார்கள். ஒருவர் மார்கத்தை திடமாக பின்பற்றுகிறார் என்றால் அவரின் சோதனையும் கடுமையாக அமையும். அதே போன்று ஒருவர் சாதரணமாக மார்கத்தை பின்பற்றுகிறார் என்றால் அவரின் சோதனையும் இலகுவாக அமையும். மேலும் அந்த நல்லடியார்  எந்த பாவங்களும் அற்ற நிலையில் பூமியில் நடந்து செல்லும் வரை அவர் இவ்வாறு சோதிக்கப் பட்டுக் கொண்டே இருப்பார்.”  என பதிலளித்தார்கள். (திர்மிதி)
ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னிக்காமல் இருப்பதில்லை.
என நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள். (நூல்: புகாரி)  
சோதனைகளில் பொறுமை காப்பதென்பது சோதனைகள் மற்றும் சிக்கல்களுக்கு தம்மைத்தாமே ஆளாக்கிக் கொள்வதையோ, அதிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொல்லாமல் இருப்பதையோ குறிக்காது. சிக்கல்கள் வரும் என்ற நிலை இருக்கும் போது முடியுமான தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதோடு, அது ஏற்பட்டு விட்ட நிலையில் அதிலிருந்து பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதற்கான இஸ்லாம் கூறும் முறையான அணுகுமுறைகளை கையாள்வதும் அவசியமாகும். உதாரணமாக நோய்களில் இருந்து பாதுகாப்புப் பெற்று ஆரோக்கியமாக வாழ முயற்சிக்க வேண்டும். அதனையும் மீறி நோய்கள் ஏற்பட்டு விட்டால் அதற்கு சிகிச்சைப் பெறுவதும் அதன் மூலம் ஏற்படும் சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு  அதற்கான நன்மைகளை இறைவனிடம் எதிர்பார்த்து நிற்பதும் அவசியமாகும்.

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

எப்போது லைலத்துல் கத்ர்?


லைலத்துல் கத்ர் இரவு எது?என்பதில் இமாம்கள் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்கின்றனர்.சுமார் 40 கருத்துக்கு மேல் உள்ளதாக இப்னுஹஜர் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.ஆனாலும் அறுதியிட்டு உறுதியிட்டு இதுதான் லைல த்துல் கத்ர் என்று சொல்பவர்களும் உண்டு.

ஜும்ஹூர்கள் எனும் பெரும்பான்மை உலமாக்கள்,மற்றும் இமாம்களின் கருத்து 27 ம் இரவு என்பதே!அதை அடிப்படையாக கொண்டே அன்றைய இரவில் திருக்குர்ஆன் கதம் செய்யும் வழக்கம் உள்ளது.

ரமலானின் அனைத்து இரவுகளையும் பாக்கியமாக கருதி அமல் செய்யவேண்டுமென்ற முன் வஸிய்யத்தை கூறிய பின்னர், கத்ர் இரவு குறித்து மூன்று முக்கிய முன்னனி ஸஹாபாக்களின் கருத்தை மட்டும் கொஞ்சம் செவி தாழ்த்தி கேளுங்கள்.ஏனெனில் கத்ர் இரவில் அமல்செய்பவர் இது கத்ர் இரவுதான் என்ற நம்பிக்கையுடன் அமல்செய்யவேண்டும்.

مَنْ يَقُمْ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

கத்ருடைய இரவில் நம்பிக்கையுடனும் நன்மையை நாடியும் இரவு நின்று வணக்கம் செய்தால் அவரின் முன்பாவங்கள் மன்னிக்கப்படும்.

முதலாவது:இப்னு மஸ்வூத் ரலி அவர்களின் கருத்து.

عن زر بْنَ حُبَيْشٍ قال : سَأَلْتُ أُبَيَّ بْنَ كَعْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقُلْتُ : إِنَّ أَخَاكَ ابْنَ مَسْعُودٍ يَقُولُ مَنْ يَقُمْ الْحَوْلَ يُصِبْ لَيْلَةَ الْقَدْرِ ؟ فَقَالَ رَحِمَهُ اللَّهُ : أَرَادَ أَنْ لا يَتَّكِلَ النَّاسُ ، أَمَا إِنَّهُ قَدْ عَلِمَ أَنَّهَا فِي رَمَضَانَ وَأَنَّهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ ، وَأَنَّهَا لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ ، ثُمَّ حَلَفَ لا يَسْتَثْنِي أَنَّهَا لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ ، فَقُلْتُ : بِأَيِّ شَيْءٍ تَقُولُ ذَلِكَ يَا أَبَا الْمُنْذِرِ ؟ قَالَ : بِالْعَلامَةِ أَوْ بِالآيَةِ الَّتِي أَخْبَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا تَطْلُعُ يَوْمَئِذٍ لا شُعَاعَ لَهَا

ஸிர் இப்னு ஹுபைஷ் ரஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நான் உபையிப்னு கஃப் ரலி அவர்களிடம்,உங்கள் சகோதரர் இப்னு மஸ்வூத் வருடம் முழுவதும் இரவு நின்று வணங்கினால்தான் கத்ர் இரவு கிடைக்கும் என்று கூறுகிறாரே என கூறினேன்.
அதற்கு உபை ரலி அவர்கள்,அல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களுக்கு ரஹ்மத் செய்யட்டும்.மக்கள் அமல் செய்வதில் சோம்பேறித்தனமாக இருந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் அவ்வாறு கூறினார்.
லைலத்துல் கத்ர் ரமலானில் இருக்கிறது.கடைசி பத்து இரவுகளில் இருக்கிறது.அது 27 ம் இரவு என்பதும் அவர்களுக்கு உறுதியாக தெரியும்.
சத்தியமாக அது 27 ம் இரவு தான் என்று மிகவும் உறுதியாக உபை இப்னு கஃப் ரலி அவர்கள் கூறினார்கள்.
எந்த அடையாளத்தை வைத்துக்கொண்டு இவ்வளவு உறுதியாக சொல்கிறீர் என நான் கேட்டேன்.அதற்கு அன்றைய தினம் சூரியன் சுடரின்றி உதயமாகும் என நபி ஸல் அவர்கள் எங்களுக்கு கூறினார்கள் என உபை ரலி அவர்கள் கூறினார்.
(ஸஹீஹ் முஸ்லிம்)

இவ்வளவு உறுதியாக சொல்கிற உபை இப்னு கஃப் ரலி அவர்கள் யார் தெரியுமா?
இவரின் இல்முக்கு நபி ஸல் அவர்கள் வாழ்த்துச்சொன்னார்கள்.
பைய்யினா என்ற அத்தியாயம் இறக்கப்பட்ட போது உபையிக்கு அந்த சூரா வை ஓதிக்காட்டச்சொல்லி நபி ஸல் அவர்களுக்கு அல்லாஹ் உத்தரவிட்ட தாக ஹதீஸில் வருகிறது.

இரண்டாவது:இப்னு அப்பாஸ் ரலி அவர்களின் கருத்து:

قَالَ اِبْن عَبَّاس : دَعَا عُمَر أَصْحَاب رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُمْ عَنْ لَيْلَة الْقَدْر , فَأَجْمَعُوا عَلَى أَنَّهَا الْعَشْر الأَوَاخِر , قَالَ اِبْن عَبَّاس : فَقُلْت لِعُمَر إِنِّي لأَعْلَمُ - أَوْ أَظُنُّ - أَيَّ لَيْلَةٍ هِيَ , قَالَ عُمَر : أَيُّ لَيْلَةٍ هِيَ ؟ فَقُلْت : سَابِعَةٌ تَمْضِي أَوْ سَابِعَة تَبْقَى مِنْ الْعَشْر الأَوَاخِر , فَقَالَ : مِنْ أَيْنَ عَلِمْت ذَلِكَ ؟ قُلْت خَلَقَ اللَّه سَبْعَ سَمَوَاتٍ وَسَبْع أَرْضِينَ وَسَبْعَة أَيَّام وَالدَّهْر يَدُور فِي سَبْع وَالإِنْسَان خُلِقَ مِنْ سَبْع وَيَأْكُل مِنْ سَبْع وَيَسْجُدُ عَلَى سَبْع وَالطَّوَاف وَالْجِمَار وَأَشْيَاء ذَكَرَهَا , فَقَالَ عُمَر : لَقَدْ فَطِنْت لأَمْرٍ مَا فَطِنَّا لَهُ ))
وأخرج هذه القصة إِسْحَاق بْن رَاهْوَيْهِ فِي مُسْنَده وَالْحَاكِم وفيها : (( فَقَالَ عُمَر أَعْجَزْتُمْ أَنْ تَكُونُوا مِثْلَ هَذَا الْغُلامِ الَّذِي مَا اِسْتَوَتْ شُؤُونُ رَأْسِهِ

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
உமர் ரலி அவர்கள் ஸஹாபாக்களை ஒன்று கூட்டி லைலத்துல் கத்ர் இரவு எது?என வினவினார்கள்.அதற்கு அத்துனை ஸஹாபாக்களும் இறுதிபத்தில் உள்ளது என்று கூறி நிறுத்திக்கொண்டனர்.
உடனே நான் உமர் ரலி அவர்களிடம் அது எந்த இரவு என்று எனக்கு தெரியும் என்று கூறியபோது,அது எந்த இரவு?என கேட்டார்கள்.அதற்கு நான்
கடைசி பத்தில் உள்ள 7 வது (அதாவது 27 ம்) இரவு என்று கூறினேன்.
எதை அடிப்படையாக வைத்து இதை கூறுகிறாய் என உமர் ரலி அவர்கள் என்னிடம் கேட்டார்கள்.அதற்கு நான் இவ்வாறு பதில் சொன்னேன்.
அல்லாஹ் ஏழு வானங்களை படைத்தான்.ஏழு பூமியையும் படைத்தான்.ஏழு நாட்களை படைத்தான்.காலம் ஏழில் சுழலுகிறது.மனிதன் ஏழு மூலப்பொருட்களால் படைக்கப்பட்டுள்ளான்.பூமியில் ஏழுவையான உணவுவகைகளை அல்லாஹ் கொடுக்கிறான்.ஸஜ்தாவின் உறுப்புக்களும் ஏழுதான்.தவாபும் ஹஜ்ஜில் கல் எறிவதும் ஏழுதான்.
நான் இதை கூறியபோது உமர் ரலி அவர்கள் நீங்கள் இந்த சிற்வர் அளவுக்கு சிந்திக்கவில்லையே?என்று கூறினார்கள்.
(ஹாகிம்)

மூன்றாவது:இப்னு உமர் ரலி அவர்களின் கருத்து:

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ رَأَيْتُ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَأَنَّ بِيَدِي قِطْعَةَ إِسْتَبْرَقٍ فَكَأَنِّي لا أُرِيدُ مَكَانًا مِنْ الْجَنَّةِ إِلا طَارَتْ إِلَيْهِ وَرَأَيْتُ كَأَنَّ اثْنَيْنِ أَتَيَانِي أَرَادَا أَنْ يَذْهَبَا بِي إِلَى النَّارِ فَتَلَقَّاهُمَا مَلَكٌ فَقَالَ لَمْ تُرَعْ خَلِّيَا عَنْهُ فَقَصَّتْ حَفْصَةُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى رُؤْيَايَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِعْمَ الرَّجُلُ عَبْدُ اللَّهِ لَوْ كَانَ يُصَلِّي مِنْ اللَّيْلِ فَكَانَ عَبْدُ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ يُصَلِّي مِنْ اللَّيْلِ وَكَانُوا لا يَزَالُونَ يَقُصُّونَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرُّؤْيَا أَنَّهَا فِي اللَّيْلَةِ السَّابِعَةِ مِنْ الْعَشْرِ الأَوَاخِرِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَأَتْ فِي الْعَشْرِ الأَوَاخِرِ فَمَنْ كَانَ مُتَحَرِّيهَا فَلْيَتَحَرَّهَا مِنْ الْعَشْرِ الأَوَاخِر ِ

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நான் கண்ட ஒரு கனவில் என்னுடைய கையில் பட்டுத் துணி ஒன்று இருந்தது. நான் சொர்க்கத்தில் எந்த இடத்திற்குச் செல்ல விரும்பினாலும் அது என்னைக் கொண்டு செல்லும்போது என்னிடம் இருவர் வந்து என்னை நரகத்திற்குக் கொண்டு செல்ல முயன்றார்கள். அப்போது அவர்களை ஒரு வானவர் சந்தித்து 'இவரைவிட்டு விடுங்கள் என்று கூறிவிட்டு என்னிடம் 'பயப்படாதீர்!' என்று கூறினார்கள். என்னுடைய கனவ ஹஃப்ஸா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கூறியபோது 'அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் மனிதர்களில் அவர் மிக நல்லவர்" என்று கூறினார்கள். அதன் பிறகு நான் இரவில் தொழுபவனாம் விட்டேன்.
நபித்தோழர்கள் லைலத்துல் கத்ர் இரவு இருபத்தி ஏழாம் இரவு என்று கனவு கண்டு நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் கனவைப் போல் கனவு கண்டேன். அது கடைசிப் பத்து நாள்களில்தான் அமைந்துள்ளது. லைலத்துல் கத்ர் இரவை அடைய முயல்கிறவர் கடைசிப் பத்தில் தேடட்டும்' என்று கூறினார்கள்.
(புகாரி)

முப்பெரும் மூத்த ஸஹாபிகளான அப்துல்லாக்கள் ரலி அவர்களின் கருத்து கத்ர் இரவை தெரிந்துகொள்ள போதுமானது.
சரி! கத்ர் இரவை தெரிந்த பின்பு இனி அந்த இரவில் என்ன செய்ய வேண்டும்?

عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ : قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ عَلِمْتُ أَيُّ لَيْلَةٍ لَيْلَةُ الْقَدْرِ مَا أَقُولُ فِيهَا ؟ قَالَ : قُولِي اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

லைலத்துல் கத்ர் இரவை நான் அறிந்துகொண்டால் என்ன ஓத வேண்டும்?   என ஆயிஷா ரலி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் கேட்டபோது-
اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي யா அல்லாஹ்!நீ மன்னிப்பவன்.கண்ணியமானவன். மன்னிப்பதை நேசிக்கிறாய்,எனவே என்னை மன்னித்து விடுவாயாக ஆமீன்!
(திர்மிதி)
இந்த ஹதீஸை கொஞ்சம் உற்று நோக்கி கவனியுங்கள்.கத்ர் உடைய இரவில் செய்ய வேண்டிய பிரதான அமல் துஆ என்பதை நபி ஸல் அவர்கள் அழகாக கூறுகிறார்கள்.
துஆ வணக்கங்களின் மூலை:
இந்த இரவில் அல்லாஹ்வுடன் உள்ள நம் முனாஜாத்தை தொடர்பை அதிகப்படுத்திக்கொள்ளவேண்டும்.

துஆ என்பது ஒரு இபாதத்.

நாம் செய்யும் துஆ கபூல் ஆகிறது,அல்லது இல்லை அதை தாண்டி அது ஒரு தனி வணக்கம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
நபி சல் அவர்களுக்கு பல துஆக்கள் உலகில் கபூலாகவில்லை என்பதை நாம் அறிந்த செய்தியே!
நான் என் ரப்பிடம் மூன்று துஆ கேட்டேன்.இரண்டை தந்தான், ஒன்றை மறுத்துவிட்டான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
பிர்அவ்னுக்கு எதிராக நபி மூஸா அலை அவர்கள்கேட்ட துஆ 40 ஆண்டுக்கு பின்னே கபூலானது.
துஆவின் அங்கீகாரம் மறுக்கப்படுவதும் தாமிதமாகுவதும் துஆவின் மீது நமக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தி விடக்கூடாது.
துஆ கபூலாகும் ஒழுங்குகளை கவனத்துடன் பேண வேண்டும்.
அல்லாஹ்விடம் கவனத்துடன் கேட்கவேண்டும்.கவனக்குறைவான உள்ளங்களின் பக்கம் அல்லாஹ் ஏறிட்டும் பார்க்க மாட்டான்.துஆ கபூலாகும் என்ற உறுதியுடன் கேட்க வேண்டும்.ஹலால் ஹராமில் பேனுதலை கடைபிடிக்க வேண்டும்.

ஸஃது ரலி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் யா ரஸூலல்லாஹ்!என் துஆ  கபூலாக நான் என்ன செய்ய வேண்டும்?என்று கேட்டபோது-
اطب مطعمك உன் உணவை ஹலாலாக்கு என்று உபதேசம் செய்தார்கள்.

துஆ என்பது மகத்தான ஆற்றல் கொண்டது.
நபி இப்ராஹீம் அலை அவர்களின் துஆவால் நான் உங்களுக்கு கிடைத்தேன் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

நபி ஸல் அவர்கள் துஆவின் ஒழுங்கை தம் தோழர்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள்

عن معاذ قال مر النبي صلى الله عليه وسلم على رجل يقول اللهم إني أسألك تمام النعمة قال هل تدري ما تمام النعمة قال تمام النعمة دخول الجنة والفوز من النار

நபி சல் அவர்கள் ஒருவரை கடந்து சென்றார்கள்.அவர் யா அல்லாஹ் பரிபூர்ண நிஃமத்தை உன்னிடம் கேட்கிறேன் என துஆச்செய்தார்.
அப்போது ஸல் அவர்கள் அம்மனிதரை அழைத்து பரிபூர்ண நிஃமத் என்றால் என்னவென்று தெரியுமா?என கேட்டார்கள் அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதர் அவர்களே!எனக்கு தெரியாது,என்ற போது சுவனத்தில் நுழைவதும் நரகிலிருந்து வெற்றிபெறுவதுமாகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
ثم مر على رجل يقول اللهم اني أسألك الصبر قال قد سألت ربك البلاء فسله العافية

இன்னொரு தோழர் யா அல்லாஹ் எனக்கு பொருமையை கொடு என்று துஆச்செய்தார்கள்.அப்போது ஸல் அவர்கள் அம்மனிதரிடம்,நீர் உம் ரப்பிடம் சோதனையை கேட்கிறாயா?என்று கண்டித்தார்கள்.அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை கேளுங்கள் என்று கூறினார்கள்.

 اللهم اني اعوذ بك من الفتنة   யா அல்லாஹ் என்னை பித்னாவை விட்டும் பாதுகாப்பாயாக என துஆச்செய்துகொண்டிருந்த ஒருவரை உமர் ரலி அவர்கள் கடந்துசென்றபோது-யா அல்லாஹ் இவர் துஆவை விட்டும் என்னை பாதுகாப்பாயாக என கூறினார்களாம்.
காரணம் கேட்டபோது அல்லாஹ் தன் வான்மறையில் பொருளும் பிள்ளை யும் பித்னா என்று கூறுகிறான்.பொருளும் பிள்ளையும் உனக்கு வேண்டாமா? என விளக்கம் தந்தார்கள்.
நபி ஸல் அவர்கள் தம் தோழர்களுக்கு துஆவின் மீது அபாரமான நம்பிக்கையை ஏற்படுத்தினார்கள்.

دخل رسول الله صلى الله عليه وسلم، ذات يوم المسجد فإذا هو برجل من الأنصار يقال له: أبو أمامة، فقال يا أبا أمامة: ما لي أراك جالساً في المسجد في غير وقت الصلاة؟ قال: هموم لزمتني وديون يا رسول الله،
قال: أفلا أعلمك كلاماً إذا أنت قلته أذهب الله عز وجل همك وقضى عنك دينك؟ قال: قلت بلى يا رسول الله، قال: قل إذا أصبحت وإذا أمسيت: اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال، قال: ففعلت ذلك فأذهب الله عز وجل همي وقضى عني ديني
அபூ உமாமா ரலி என்ற நபித்தோழரை பள்ளிவாசலில் கண்ட நபி ஸல் அவர்கள்,த்ழுகை அல்லாத நேரத்தில் இங்கு வர காரணம் என்ன?என கேட்டபோது கடன் சுமையும் கவலையும் என்று  நபி ஸல் அவர்களிடம்  கூறிய போது ஸல் அவர்கள் அவர்களுக்கு கற்றுக்கொடுத்த துஆ இது:
اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال
அதற்கு பிறகு  எனக்கு கடன் பிரச்சனையும் தீர்ந்தது கவலையும் போய்விட்டது என்று கூறுகிறார்கள்.
அலி ரலி அவர்கள், அல்லாஹ்வின் கடமையில் குறைவு செய்துவிட்டேன் என்ன செய்யவேண்டும்? என நபியிடம் கேட்டபோது இந்த துஆவை கற்றுக்கொடுத்தார்கள்.அந்த துஆ இது:
"اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

காலித் ரலி அவர்கள் நபியிடம் கெட்ட கனவு வருகிறது என முறையிட்ட போது நபி ஸல் அவர்கள் பின்வ்ரும் துஆவை ஓதச்சொன்னார்கள்.
بسم الله أعوذ بكلمات الله التامة من غضبه وعقابه وشر عباده ومن همزات الشياطين وأن يحضرون
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ ۖ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;, என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக.

செவ்வாய், 30 ஜூலை, 2013

இஃதிகாஃப் இருப்பதின் ஆரம்ப நேர‌ம்


ஒருசில நாட்களுக்கு முன்புதான் ரமலான் பிறையைக் கண்டதுபோல் வெகு விரைவாக ரமலானின் 2 பத்துகளும் கடந்துவிட்டன. 20 நாட்களின் நோன்புக‌ளையும் வழக்கம்போல் சிறப்பாகவும், சந்தோஷமானதாகவும், உற்சாகம் மிக்கதாகவும் ஆக்கித்தந்த வல்ல நாயன் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! இந்த ரமலானிலேயே அதிமுக்கியத்துவம் வாய்ந்த (மீதியுள்ள 10 நாட்களான) கடைசிப் பத்து நாட்களையும் அதன் மகத்துவமிக்க இரவுகளையும் மேலும் அதிகமதிகமான நல்ல அமல்களோடு சிறப்பித்து, நன்மைகளை வாரிக் கொள்வதற்கு அல்லாஹுதஆலா நம்மனைவருக்கும் உதவி செய்தருள்வானாக!

கடைசிப் பத்து நாட்களின் சிறப்பையும் மகத்துவத்தையும் அறிய "ரப்புல் ஆலமீன் தரும் ரமலான் பரிசு" என்ற இடுகையைப் பார்க்கவும். இப்போது இந்த கடைசிப் பத்தில் செய்யவேண்டிய இன்னொரு சிறப்பு வணக்கமான "இஃதிகாப்" பற்றிப் பார்ப்போம்.


"இஃதிகாஃப்" என்ற பொதுவான அரபி சொல்லுக்கு "தங்குவது" என்று சொல்லப்படும். மார்க்க அடிப்படையில் நாம் சொல்வதானால், அல்லாஹ்வுக்காக சில நாட்களை ஒதுக்கி, பள்ளிவாசலில் சென்று தங்கி, இறைவனிடம் நன்மைகளை எதிர்ப்பார்த்த நிலையில் இயன்றவரை அதிகமாக வணக்கங்கள் புரிவதை "இஃதிகாஃப்" என்கிறோம்.இஃதிகாஃப் இருப்பவர்கள் பெரும்பாலும் 21 வது இரவின் மக்ரிப் தொழுகைக்கு முன் ஆரம்பிக்கின்றனர். ஆனால் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடிக் கொள்ளும்படி நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (பார்க்க:  புஹாரி 2027). மேலும் ஃபஜ்ரு தொழுதவுடன் நபி(ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்கத் துவங்குவார்கள் என்ற ஆதாரப்பூர்வமான செய்தியும் உள்ளது.

நபி(ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் ஃபஜ்ரு தொழுகையை முடித்துவிட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள்.

            நூல்: முஸ்லிம் (2007)

அப்படியானால் ஃபஜ்ரு தொழுதவுடன் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள் என்றால், அது 21 ஆம் நாள் ஃபஜ்ராக இருக்க முடியாது. ஏனெனில் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடும் வாய்ப்பில் அந்த 21 ஆம் இரவு தவறிவிடும் வாய்ப்புள்ளதால், 20 ஆம் நாள் ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகுதான் நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃபை துவங்கி இருப்பார்கள் என்று நாம் விளங்குவதே பேணுதலாகவும், இரண்டு ஹதீஸ்களுக்கும் பொருத்தமாகவும் இருக்கும். ஆக, ரமலானில் இஃதிகாஃப் இருக்க விரும்புபவர்கள் 20 ஆம் நாள் காலை ஃபஜ்ரு தொழுகையை முடித்துவிட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்றுவிட வேண்டும்.

இஃதிகாஃபின் முடிவு நேரம்

அபூஸயீத்(ரலி) அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள். இருபதாம் நாள் முடிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
              நூல்: புஹாரி (2018)

நபி(ஸல்) அவர்கள் நடுப்பத்தில் இஃதிகாஃப் இருக்கும்போது இருபதாம் நாள் முடிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தங்கள் வீட்டிற்கு செல்வார்கள் என்ற ஹதீஸிலிருந்து கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருப்பவர்கள் 29 ஆம் நாள் முடிந்து அல்லது 30 ஆம் நாள் முடிந்து மாலையாகி, ஷவ்வால் மாதம் துவங்கும் இரவில் வீடு திரும்பலாம் என்ற வழிமுறை நமக்கு கிடைக்கிறது.

ஆக இஃதிகாஃப் இருப்பவர்கள், ரமலான் மாதத்தின் பிறை 29 ல் அந்த மாதம் முடிந்து ஷவ்வால் பிறை தென்பட்டாலோ அல்லது ரமலான் பிறை 30 ஆக பூர்த்தியடைந்த பிறகோ அன்றைய மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இஃதிகாஃபை முடித்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பிவிட‌லாம். ஆனால் பெருநாள் தொழுகையை முடித்து விட்டுதான் வீடு திரும்பவேண்டும் என்று சிலர் கூறுவதற்கு நபிமொழிகளில் ஆதாரங்கள் எதுவுமில்லை.

வெள்ளி, 26 ஜூலை, 2013

பத்ரு களம் - நினைவு கூறுவோம்.

ரமாளான் மாதம் பிறை 17ல் இஸ்லாமிய முதல்போர் பதுரு யுத்தம்.
                                                                                                                                       
பத்ரு யுத்தம் பற்றி நாம் அனைவரும் தெரிந்திருந்தாலும் ஒவ்வொரு முஸ்லீமும் அந்த நிகழ்வை ஞாபகப்படுத்துவதன் மூலம் நம்முடைய தக்வாவை அதிகரிக்கலாம்.

எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா ஸல்லள்ளாஹு அலைஹிவஸல்லாம் அவர்கள் காலத்தில் தாமே சென்று செய்த யுத்தங்களில் மிக முக்கியமானது பதுர் யுத்தமாகும். இதுவே இஸ்லாத்தின் வெற்றிக்கும் ,இஸ்லாம் அழிக்கப்படாமல் பரவுவதற்கும், முன்னேற்றத்திற்கும் மக்களின் ஊக்கத்திற்கும் வீரத்திற்கும் வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களும் முஸ்லிம்களின் எதிரிகளும் கி.பி. 623 ம்  ஆண்டு ஹிஜ்ரி 2 ம் வருடம் யுத்த களத்திற்குச் சென்று யுத்த ஆயத்தங்கள் செய்து கொண்டனர். இவ்யுத்தத்தில் கலந்துக் கொண்ட முஸ்லிம்கள்  எண்ணிக்கை 313 பேர் என்றும் எதிரிகளின் தொகை ஏறக்குறைய 1000 என்றும் ஹதீஸ்களில் காணப்படுகிறது.

எம்பெருமானார் (ஸல்) அவர்கள் தாமே அணியை ஒழுங்கு செய்தனர். இதில் முஸ்லிம்கள் வெற்றி பெறுவர் என்ற நற்செய்தி பேரிறையிடத்திருந்து வந்ததை எம்பெருமானார் (ஸல்) முஸ்லிம் வீரர்களுக்கு எடுத்துரைத்தார்கள்...

மக்காவின் இறை நிராகரிப்பாளர்களுடனான பத்ரு போர் நடைபெறுவதற்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் மக்காவின் இறை நிராகரிப்பாளர்கள் ஒவ்வொருவரின் பெயரைக் கூறி அவர்கள் கொல்லப்படும் இடத்தைச் சுட்டிக் காட்டினார்கள். பின்னர் பத்ரு போர் நடைபெற்று முடிந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் கூறியவாறே அப்போரில் எதிரிகள் கொல்லப்பட்டனர் என்பதை அப்போரில் கலந்துக் கொண்ட நபித்தோழர்கள் அறிந்து நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு மெய்பிக்கப்பட்டதை உணர்ந்தார்கள்.


பத்ரு களம் கண்ட வீரத் தியாகிகள் (ஷுஹதாக்கள்)

01. உமைர் இப்னு அபீ வக்காஸ் (ரலி)

02. ஸஃப்வான் இப்னு வஹப்(ரலி)

03. துஷ்ஷம்மாஃ இப்னு அப்து அம்ர்(ரலி)

04 .முஸஜ்ஜஃ இப்ன ஸாலிஹ்(ரலி)

05.ஆகில் இப்னுல் பக்ரு(ரலி)

06.உபைதா இப்னுல் ஹாரித் இப்னு அப்துல் முத்தலிப்(ரலி)

07.உமைர் இப்னுல் ஹம்மாம்(ரலி)

08 .யஸீது இப்னுல் ஹாரித் இப்னு கைஸ்(ரலி)

09 .அவ்ஃப் இப்னு ஹாரித் இப்னு ரிஃபாஆ (ரலி)

10 .மஸ்வூது இப்னு ஹாரித் இப்னு ரிஃபாஆ(ரலி)

11 .மஸ்அத் இப்னு ஹத்மா(ரலி)

12 .முபஷ்ஷிர் இப்னு அப்துல் முன்திர்(ரலி)

13 .ஹாரிதா இப்னு ஸுராக்கா (ரலி)

14 .ராஃபிஃ இப்னுல் முஅல்லா (ரலி)

பதிருப் போர் பற்றிய பயான் கோட்டுப் பாருங்கள், கண்ணிர் வராதவருக்கும் வந்துவிடும்.


போர் நடந்த அந்த இடங்களின் படங்களை கீழே பாருங்கள்

On 17th Ramadan Year 2nd of Hejra, Prophet Mohammad (PBUH) came to BADER from MADINA With around 300 of his Followers from the way shows in picture (Red Arrow).


Prophet Mohammed (PBUH) Camp with his Army in this Area and The Hill in the Picture is Called (Odoat Al Dunea)
Right Arrow Shows (Al Odoat Al Dunea) and on versant of it Muslims Camp, Middle Arrow Shows the way which ABO SOFEAN Convoy pass all the way through and Left Arrow Shows Malaeka mountain  (where JEBREAL and MEKAEAL sent By ALLAH with 1000 Of Malaeka to help Muslims Army against Unbelievers.)


This is where Muslims Army moved to where BADER WELL was at the back of them

A different picture angle of (Al Odoat Al Dunea) and Malaeka Mountain and the new camp area where Muslims moved to.



The Arrow shows the place of the Followers Graves

BADER THE OLD TOWN

இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வான பத்ரு தற்காப்பு யுத்ததையும், பத்ரு யுத்தப் போராளிகளை நாம் நினைவு கூர்ந்து நம்முடைய தக்வாவை அதிகரிக்க முயற்சி செய்யலாமே.... அல்லாஹ் போதுமானவன்.

வெள்ளி, 19 ஜூலை, 2013

மார்க்க கல்வியை கற்க வேண்டியதன் அவசியம்!

book1
ஒவ்வொரு முஃமினுக்கும் புனிதமான குர்ஆனையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனையையும் படித்து மார்க்க அறிவை பெறுவது கடமையாக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் கூறுகிறான்: -
“ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்-குர்ஆன் இறக்கியருளப் பெற்றது …” (அல்-குர்ஆன் 2:185)
அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம். (அல்-குர்ஆன் 44:58)
ஹா, மீம். விளக்கமான இவ்வேதத்தின் மீது சத்தியமாக. நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம். (அல்-குர்ஆன் 43:1-3)
அலிஃப், லாம், றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும். நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம். (அல்-குர்ஆன் 12:1-2)
இன்னும், ஒவ்வொரு சமூகத்திலும் அ(ந்த சமூகத்த)வர்களிலிருந்தே அவர்களுக்கு எதிர்சாட்சியை அவர்களுக்கு எதிராக, எழுப்பி அந்நாளில், உம்மை இவர்களுக்கு (உம்மை நிராகரிக்க முற்படும் இம்மக்களுக்கு) எதிராகச் சாட்சியாக நாம் கொண்டு வருவோம்; மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம். (அல்-குர்ஆன் 16:2)
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது. அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது. நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது); ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர்; அவர்கள் செவியேற்பதும் இல்லை. (அல்-குர்ஆன் 41:2-4)
தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும். அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு – நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்). அதில் (அதாவது சுவனபதியில்) அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். (அல்-குர்ஆன் 18:1-3)
(நபியே!) உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டதை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்; நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீதே இருக்கின்றீர். நிச்சயமாக இது உமக்கும் உம் சமூகத்தாருக்கும் (கீர்த்தியளிக்கும்) உபதேசமாக இருக்கிறது; (இதைப் பின்பற்றியது பற்றி) நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். (அல்-குர்ஆன் 43:43-44)
முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள்: -
“ஒவ்வொரு முஃமினுக்கும் மார்க்க அறிவைப் பெறுவது கடமையாகும்” (திர்மிதி)
“இஸ்லாத்தை மறுமலர்ச்சி அடையச் செய்வதற்காக, இஸ்லாமிய அறிவை பெற்றுக் கொண்டிருக்கும்போது யார் உயிர் நீத்தார்களோ, அவர்கள் சொர்க்கத்தில் நபிமார்களுக்கு அடுத்த நிலையில் இருப்பார்கள்” என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். (முஸ்லிம்)
முஹம்மது நபி (ஸல்) நவின்றுள்ளார்கள்: -
யார் ஒருவர் தன்னுடைய சகோதரனை இந்த உலக ஆசைகளின் துன்பங்களில் இருந்து நீக்குகிறாரோ, அவரை அல்லாஹ் மறுமை நாளின் துன்பங்களில் இருந்து நீக்குவான். யார் ஒருவர் இந்த உலகத்தில் ஒரு முஸ்லிமின் குற்றத்தை மறைக்கிறாறோ, அல்லாஹ் மறுமை நாளில் அவருடைய குற்றத்தை மறைப்பான்; தன்னுடைய சகோதரனுக்கு பின்னால் இருந்து உதவி செய்யக் கூடியவனுக்கு,  அல்லாஹ் அவரின் பின்னால் இருந்து உதவி செய்வான். அறிவைப் பெறுவதற்காக யார் நடந்து செல்கிறார்களோ அவருக்கு அல்லாஹ் அவருடைய பாதையை இலகுவாக்குகிறான்; சொர்க்கத்திற்கான வழியையும் காட்டுகிறான்; யாரெல்லாம் அல்லாஹ்வின் இல்லத்தில் ஒன்று கூடி குர்ஆனை ஓதி, பிறருக்கும் கற்றுக்கொடுக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வின் அருள் சூழ்ந்து கொள்ளும் மலக்குகளும் சுழ்ந்து கொள்வார்கள். அல்லாஹ் தனக்கு அருகில் உள்ளவர்களிடம் அவர்களைப்பற்றி சிலாகித்துக் கூறுவான். (திர்மிதி)
முஹம்மது நபி (ஸல்) நவின்றுள்ளார்கள்: -
இரவில் ஒரு மணி நேரம் மார்க்க அறிவைப் பெறுவதற்காக வெளியே செல்வது முழு இரவிலும் நின்று வணங்கி செலவழிப்பதை விட சிறந்தது. (திர்மிதி)
இறை இல்லத்தில் இரண்டு கூட்டங்களின் பக்கம் (நபி {ஸல்}) சென்றார்கள்; இரண்டு வகுப்பினரும் சிறந்தவர்கள் என்றாலும், ஒரு வகுப்பினர் மற்றொரு வகுப்பினரைவிட சிறந்தவர். ஒரு வகுப்பினர் அல்லாஹ்விடம் துவா கேட்டுக் கொண்டிருந்தனர். அல்லாஹ் நாடினால் அவர்கள் கேட்டதை அவர்களுக்கு வழங்குவான் அல்லது தாமதப்படுத்துவான்; மார்க்கத்தைப் புரிந்து கொள்வதற்காக மார்க்க அறிவைப் பெற முயற்சித்து அதை அறியாதவர்களுக்கும் கற்பித்துக் கொண்டும் அந்த இரண்டாம் வகுப்பினரே சிறந்தவர். நிச்சயமாக நான் ஒரு கற்றுக் கொடுப்பவனாகவே அனுப்பப்பட்டுள்ளேன்” என்று சொல்லி அவர்களிடையே அமர்ந்து விட்டார்கள்.
இஸ்லாமிய அடிப்படை அறிவைப் பெறுவது ஒவ்வொரு பருவ வயதை அடைந்த, புத்தி சுவாதீனமுள்ள முஸ்லீம்கள் அனைவருக்கும் கடமையாக்கப்பட்டுள்ளது என்று எல்லா இஸ்லாமிய அறிஞர்களும் சட்ட வல்லுனர்களும் ஒரு மனதாக குரல் கொடுக்கின்றனர்.
ஒரு சில மக்கள் தான், மார்க்க அறிவைப் பெருவதில் இருந்து தவிர்ந்து கொள்வதற்காக, வெட்கப்பட்டு, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை சொல்லி தங்களுடைய செயல்களை நியாயப்படுத்துகின்றனர்.
மார்க்க அறிவைப் பெறுவதற்கு ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்ணும் முயற்சிக்க வேண்டும் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.

மனிதப்படைப்பின் நோக்கம்!

allah
மனிதனால் உருவாக்கப்படும் அனைத்து சாதனங்களுக்கும் அதன் நோக்கம் விலாவாரியாக பேசப்படுகின்றது. இன்றைய விஞ்ஞான உலகில் தினமும் ஒவ்வொரு புதிய பொருள் கண்டுபிடிக்கப்படுவதையும் அதன் நோக்கம் பற்றி பேசப்படுவதையும் தினசரி ஊடகங்கள் நம் சிந்தனைக்கு கொண்டு வரத்தான் செய்கின்றன. ஆனால் மனிதன் படைக்கப்பட்ட நோக்கம் பற்றி மட்டும் ஏன் தான் இந்த மனித இனம் சிந்திக்காமல் இருக்கின்றதோ நமக்குத் தெரியவில்லை!
இன்னும் ஒரு விடயம் என்னவென்றால், ஏதாவது ஒரு பொருள் உருவாக்கப்பட்டு அதன் எதிர்பார்ப்பு அல்லது நோக்கம் நிறைவேறாத போது அது ஓரங்கட்டப்படுவதையும் நாம் கண்டு கொண்டுதானிருக்கிறோம். எனவே நிச்சயமாக மனிதப்படைப்பிற்க்கு ஒரு உயர்ந்த நோக்கம் இருக்கத்தான் வேண்டும் என்பதனை உலக நடப்புக்களே நமக்கு உணர்த்துகின்றன. உலக மதங்கள் மனிதப் படைப்பின் நோக்கம் பற்றி பல்வேறுபட்ட காரணங்களைக் கூறுகின்றன. உதாரணமாக சில மதங்களின் கோட்பாடுகள், கடவுள் விளையாடுவதற்காகத் தான் மனிதனைப் படைத்ததாகக் கூறுகின்றது. இதைத்தான் ‘கடவுள் இரண்டு பொம்மையைச் செய்தான் தான் விளையாட; அவையிரண்டும் சேர்ந்தொரு பொம்மையைச் செய்தன தான் விளையாட’ என்று ஒரு தமிழ்க் கவிஞர் பாடியிருக்கிறார். இவ்வாறு தான் ஒவ்வொரு மதமும், சித்தாந்தமும் பல்வேறுபட்ட கருத்துக்களைக் கூறிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இஸ்லாம் மட்டுமே மனிதன் ஏன் படைக்கப்பட்டான்? என்ற கேள்விக்கு பின் வரும் ஓர் உயர்ந்த நோக்கத்தைக் குறிப்பிடுகின்றது.

قال تعالى : وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)
என மனிதனைப் படைத்த அல்லாஹ், மனிதன் படைக்கப்பட்ட நோக்கத்தை இவ்வாறு கூறுகிறான்.
 
ஒவ்வொரு மனிதனது சிந்தனையும், எண்ண ஓட்டங்களும் வேறு படுவதாலும், அடிக்கடி அவனது சிந்தனை மாறுபடுவதாலும், கால ஓட்டத்தினால் உலகில் பற்பல மாற்றங்கள் உருவாதலினாலும் மனிதனுக்கு ஒரு நடுநிலையான, தொடர்ச்சியான வழிகாட்டுதல் எப்போதும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதனால் மனிதனைப் படைத்த அல்லாஹ் அந்த மனிதன் வழி தவறாமல் இருப்பதற்காக எல்லாக் காலங்களிலும் தனது தூதர்களை அச்சமூகங்களில் இருந்து தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தனது இறைச் செய்திகளைக் கொடுத்து அனுப்பி நேர்வழி காட்டி இருக்கிறான். இந்த சங்கிலித் தொடரான வழிகாட்டுதல் இல்லாமல் போகின்ற போதுதான் மனிதன் மிருகத்தைவிட மோசமான நிலைக்குப் போவதையும், மிருகத்தை விட கீழ்த்தரமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதையும் பார்க்கின்றோம். இதனைக் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் கலாச்சாரம், நவீனம், புதுமை என்ற பெயர்களில் சில கூட்டத்தினரையும், அதே போன்று பிறந்தது போலவே வாழ்வோம் என்ற கொள்கையில் நிர்வாண கோலமாக வாழ்ந்து கொண்டு எயிட்ஸ் நோயைத் தோற்றுவிக்கும் HIV கிருமிகளை உலகுக்கு ஏற்றுமதி செய்து கொண்டு வாழ்வதையும் பார்க்கின்றோம். சகிக்க முடியாத இந்த வாழ்க்கை முறை சமூகத்தை சாக்கடைக்குக் கொண்டு செல்கின்றன. இது ஒரு எடுத்துக் காட்டு ஆகும்.
மனிதன் உலக வாழ்க்கையிலும் உயர்ந்த நிலையில் வாழ்ந்து மறுமையிலும் உயர்ந்த வாழ்க்கையாகிய சுவனச் சோலையைச் சுவீகரித்துக் கொண்டவனாக மாற வேண்டும் என்பதுதான் அல்லாஹ்வின் நோக்கமாகும்.
மனிதன் ஏன் படைக்கப்பட்டான்? என்ற கேள்வியை மக்கள் மன்றத்தில் வைத்தோமானால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பல்வேறுபட்ட கோணங்களில் பதில்களை முன் வைப்பார்கள்.
அதேபோன்று மனிதனுக்கு மட்டும் ஆறறிவு கொடுக்கப்பட்ட நோக்கம் என்ன? என்று கேட்டால் அதற்கும் பல்வேறுபட்ட காரணங்களையும் நோக்கங்களையும் மனிதன் கூறுவான். உதாரணமாக, இந்த உலகில் மிகவும் அழகாக வீடு, வாசல்களை உண்டாக்கி வாழ அல்லது வாழ்க்கை முடியும் வரைக்கும் நல்ல நல்ல உணவுகளைக் கண்டு பிடித்து உண்டு உயிர் வாழ அல்லது பற்பல சாதனைகளை நிகழ்த்த என்று அடுக்கிக் கொண்டே போவார்கள். உண்மையில் மனிதன் நிதானமாக, நடுநிலைத் தன்மையோடு சிந்தித்தால், இது போன்ற காரணங்கள் அனைத்தும் முழுமையற்ற, மேலோட்டமான காரணங்களாகும் என்பதனை உணர்ந்து கொள்வான். ஏனெனில் மேற்கூறப்பட்ட காரணங்களை உள்ளடக்கிய அனைத்துப் பணிகளையும் மனிதனல்லாத மிருகங்கள், பட்சிகள், ஊர்வன போன்ற அனைத்தும் தினமும் செய்து கொண்டுதான் இருக்கின்றன. இது போக சில படைப்பினங்கள் மனிதனை விடவும் மிக நேர்த்தியாக, பிறர் உதவியில்லாமல் தமது காரியங்களையும் முறையாக நிவர்த்தி செய்து கொள்வதையும் நாம் பார்க்கத்தான் செய்கின்றோம்.
உதாரணமாக, பறவைகளில் தூக்கனாங் குருவியைப் போல் நம்மால் மிகமிக நுற்பமாக கூடு கட்டவே முடியாது! அதன் கூடு மெல்லிய நாறுகளினால் பின்னப்பட்டது, காற்றில் ஆடியவாறே தொங்கிக் கொண்டிருக்கும். மழையில் கூட நனையாது! எத்தனை ஆரோக்கியமான அறைகள்! முட்டையிட்டு அடைகாப்பதற்கு ஏற்ற முறையில் ஒரு தனியறை, முன் வாயிலறை, ஆண் குருவிக்கு வேறு அறை! இது மட்டுமா இரவு நேரங்களில் சூடற்ற குளிர்ந்த மின்விளக்குகள்! மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து வந்து கூட்டினுல் ஒட்டி வைத்து விடும், அது இறந்து விட்டால் வேறொன்றைப் பிடித்து வந்து ஒட்டி வைத்து விட்டு இறந்து போன பூச்சியை அகற்றி விடும். மனிதன் கூட தற்போது தான் மின் விளக்குகளைக் கண்டுபிடித்தான்.
 
இவ்வாறு அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ்கின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன, பிறர் தேவையற்று தத்தமது தேவைகளை நிறை வேற்றுவனவாகத்தான் இருக்கின்றன. மனிதன் மட்டும் தான் மிகவும் பலவீனமுள்ளவனாகவும், பிறர் உதவியில் தங்கியிருப்பவனாகவும் காலத்தைக் கடத்துகின்றான். எனவே, நாம் கட்டாயம் சரியாகச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். உதாரணமாக, ஒரு சாதாரன பேனா வாங்கப் போனாலும் கூட நன்றாக நமது மூளையை உபயோகித்துத்தான் அந்தப் பேனாவை வாங்குகின்றோம். இந்தப் பேனா சிறந்ததா அல்லது மற்றதுவா?, இந்த நாட்டு உற்பத்தி சிறந்ததா அல்லது அந்நாட்டு உற்பத்தி சிறந்ததா?, கருப்பு நல்லதா நீலமா? என்று எத்தனை எத்தனை கேள்விகளைக் கேட்டு வியாபாரியைக் குடைகிறோம். அத்தோடு எழுதிப் பார்ப்பதற்கும் தவறுவதில்லை. சில நேரங்களில் அந்தப் பேனா எழுதாமல் போனால் கடைக்காரனை திட்டி விடுகிறோம். ஒரு பேனாவுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் கூட, நமக்கும் ஏக தெய்வத்திற்கும் இடையே இருக்கும் நிஜமான தொடர்பு பற்றித் தெறிந்து கொள்வதற்குக் கொடுப்பதில்லையே என்று நினைக்கும் போதுதான் வேதனையாக இருக்கின்றது.
நாம் சாதாரன ஒரு பொருள் வாங்குவதில் காட்டும் அக்கரையை விட பன்மடங்கு அக்கரையை நம் விடயத்திலும், நம் மதம் குறித்த விடயத்திலும், நாம் எதற்காப் படைக்கப் பட்டோம் என்ற கேள்விக்கு சரியான விடை காண்பதிலும் நாம் ஒவ்வொருவரும் ஆர்வம் காட்ட வேண்டும். இது ஒவ்வொரு புத்தி சுவாதீனமுள்ள ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும்.
நாம் மேலே குறிப்பிட்டுக் காட்டியுள்ள ‘ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை’ (51:56) என்ற அல்-குர்ஆன்
வசனமானது மிகவும் ஆழமான கருத்தை உள்ளடக்கியுள்ளது.
மேலோட்டமாக இவ்வசனத்தை வாசிக்கும் ஒருவர், தொழுகை, நோம்பு, ஸகாத்து, ஹஜ் போன்ற இன்னும் இதர வணக்கங்களிலேயே நம் காலத்தைக் கடத்தினால் ஏனைய விடயங்களில் நாம் ஈடுபடுவதில்லையா? உழைக்க வேண்டாமா? உண்ண வேண்டாமா? உறங்க வேண்டாமா? குடும்பம் நடத்த முடியாதா? போன்ற கேள்விகளைக் கேற்கலாம். அப்படியானால் இவ்வசனத்தின் கருத்துத்தான் என்ன?
அதாவது வணக்கம் என்பதனை சுருங்கக் கூறின், அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களை கவனத்திற் கொண்டு நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதாகும். அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழி காட்டுதல்களுக்கமைய நம் ஐம்பெரும் கடமைகள் முதல் தினசரி வாழ்க்கை அம்சங்களும் அமையுமாக இருந்தால் அவையனைத்தும் வணக்கமாகவே கருதப்படும். எனவே ஒரு உண்மையான இறை அடியான் உறங்குவதும் வணக்கமே. ஏனெனில் அவன் தூங்கும் போதும் நபிகளாரின் நடை முறைகளைக் கவனத்தில் கொண்டு தான் உறங்குவான், அப்போது தூக்கமும் வணக்கமாக மாறி விடுகின்றன.ஆக, மனிதப்படைப்பின் முழு நோக்கம், அவன் பிறந்தது முதல் இறக்கும் வரை அனைத்து செயல்களிலும் இறை திருப்தியை மட்டும் கவனத்திற் கொண்டு, அண்ணலாரின் அடிச்சுவடுகளைப் பேணி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதேயாகும்.
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைக் பின்பற்றி வாழ்ந்து மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

செவ்வாய், 16 ஜூலை, 2013

ரமாளான் மாதம் சிறப்பு

முன்னுரை
    அரபி மாதங்கள் என அழைக்கப்படும் சந்திர மாதங்களில் 9 வது மாதம் ரமளான் மாதமாகும். இந்த ரமளான் மாதத்திற்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் அம்மாதத்தின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.   
1. திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம்.
    ரமாளான் மாதம் மற்ற மாதங்களைப் போன்று ஒரு மாதமானாலும், 'அம்மாதத்தில் தான் திருக்குர்ஆன் இறக்கப்பட்டது' என்ற சிறப்பைப் பெறுகிறது.
அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்:    
 ﴿ شَهْرُ رَمَضَانَ الَّذِيْ اُنْزِلَ فِيْهِ الْقُرْاَنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ ﴾
    'ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழி காட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை, தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப் பெற்றது'. (அல்குர்ஆன் 2 : 185)
2. நோன்புக்குரிய மாதம்.
    உலகமகா அற்புதமான திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில் இறக்கப்பட்ட காரணத்திற்காக அந்த ரமளான் மாதத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. இது அதற்குரிய மற்றொரு சிறப்பு.
அல்லாஹ் சொல்கிறான்:
 ﴿ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ﴾
    'ஆகவே எவர் அம்மாதத்தை அடைந்து கொள்கின்றாரோ அவர் அம்மாதம் (முழுவதும்) நோன்பு நோற்கட்டும்'. (அல்குர்ஆன் 2 : 185)
3. சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்.
 إِذَا جَاءَ رَمَضَانُ فُتِحَتْ اَبْوَابُ اْلجَنَّةِ
    'ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன'. - நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1898, முஸ்லிம் 1956)
மற்றொரு நபிமொழியில்,   
..... وَفُتِحَتْ اَبْوَابُ اْلجَنَّةِ فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ...
    '..சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன, அவற்றின் எந்த வாயிலும் மூடப்படுவதில்லை...' நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி - 618, இப்னுமாஜா 1642)
    முஃமின்களின் ஒரே குறிக்கோள் சொர்க்கத்தை அடைவதாகும், அந்த சொர்க்கத்தின் வாசல் கதவுகள் ரமளான் மாதத்தில் தட்டாமலேயே திறக்கப்படுகின்றன.
    அந்த சொர்க்கத்தில் நுழைவதற்குறிய தகுதியை அடைவதற்கு சிறந்த மாதம் தான் ரமளான் மாதமாகும்.
    மொத்தத்தில் சொர்க்கத்தில் நுழைவதற்கு முஃமின்கள் இதன் மூலம் ஆர்வமூட்டப்படுகிறார்கள். அதாவது சொர்க்க வாசலை திறந்து வைத்து, அதில் நுழைவதற்குரிய முயற்சியில் ஈடுபடுமாறு அல்லாஹ் முஃமின்களை அழைக்கிறான்.
   
4. வானத்தின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்.
 إِذَا دَخَلَ شَهْرُ رَمَضَانَ فُتِحَتْ اَبْوَابُ السَمَاء .....
    'ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன...' - நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1899)
    வானத்தின் வாயில்கள் இரண்டே சமயங்களில் தான் திறக்கப்படும். ஒன்று ரமளான் மாதம் மற்றொன்று கியாமத்து நாள். அல்லாஹ் சொல்கிறான்:    
 ﴿ وَّ فُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ اَبْوَابَا ﴾
    'வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாக ஆகும'; - (அல்குர்ஆன் 78 : 19)
    ரமளான் மாதத்தில் வானவர்களுக்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு இருக்கும், ஏனெனில் அம்மாதத்தில் அவர்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.   
5. அருளின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்.
 إِذَا كَانَ رَمَضَانُ فُتِحَتْ اَبْوَابُ الرَحْمَةِ .....   
    'ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன'.... - நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1957)
    அருள் வாயில்கள் திறக்கப்பட்டு மனித சமுதாயத்திற்கு அல்லாஹ் ரமளான் மாதத்தில் மடை திறந்த வெள்ளம் போல் அபரிமிதமாக அருள் புரிகிறான். அல்லாஹ்வின் அருளினால் மட்டுமே சுவர்க்கம் செல்ல முடியும்.   
6. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படும் மாதம்.
 ... وَغُلِّقَتْ اَبْوَابُ الناَّرِ .....
    '....நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன....' - நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1956)
மற்றொரு நபிமொழியில்,   
 ... وَغُلِّقَتْ اَبْوَابُ الناَّرِ فَلَمْ يُفْتَحْ مِنْهَا بَابٌ .....
    '...நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன, அவற்றின் எந்த வாயிலும் திறக்கப்படுவதில்லை...' நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி - 618, இப்னுமாஜா 1642)
7. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்ற மாதம்.
  وَسُلْسِلَتِ الشَّيَاطِيْنُ .....
    '....ஷைத்தான்கள் சங்கிலியால் விலங்கிடப்படுகின்றனர்'. - நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1957)   
8. நல்லதைத் தேடுவோர் அழைக்கப்படும் மாதம்.
 ...وَيُنَادِيْ مُنَادٍ يَابَاغِيَ الْخَيْرِ اَقْبِلْ وَيَابَاغِيَ الشَّرِّ اَقْصِرْ .....
    '...நல்லதைத் தேடுபவனே! முன்னேறிவா! தீமையைத் தேடுபவனே! (தீமையைக்) குறைத்துக் கொள்! என்று அழைப்பாளர் ஒருவர் அழைக்கிறார்...' - நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி - 618, இப்னுமாஜா 1642)
மற்றொரு அறிவிப்பில் 'ஒரு வானவர் அழைக்கிறார்' என்று வந்துள்ளது.
9. நரகவாதிகள் விடுதலை அடையும் மாதம்.
 ...وَلِلَّهِ عُتَقَاءُ مِنَ النَارِ وَذَلِكَ كُلُّ لَيْلَةٍ .....
    '...நரகத்திலிருந்து விடுவிக்கப்படுபவர்கள் பலர் உள்ளனர். (இவ்வாறு விடுவிப்பது) ஒவ்வொரு இரவிலுமாகும்...' - நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி - 618, இப்னுமாஜா 1642)   
10. லைலத்துல் கத்ர் இரவைக் கொண்ட மாதம்.
ஆயிரம் மாதங்களை விட சிறந்த லைலத்துல் கத்ர் எனும் இரவு ரமளான் மாதத்தில் தான் இருக்கிறது.
 ...تَحَرُّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الغَسْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ
    '...ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி - 722)   
11. முன் பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்.
 ...مَنْ صَامَ رَمَضَانَ وَقَامَهُ إيْمَانًا وَاحْتِسَابًا غُفِّرَ لَهُ مَاتَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
    'நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமளானில் நோன்பு நோற்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன'. (நபிமொழி) (அபூஹுரைரா (ரலி), திர்மிதி - 619)   
12. தக்வா பயிற்சிக்குரிய மாதம்.
தக்வா எனும் இறையச்சத்தை பெறுவதற்கு சிறந்த பயிற்சியளிக்கும் மாதம். அல்லாஹ் சொல்கிறான்.
 ﴿ يَأَيُّهَا الَّذِيْنَ اَمَنُوْا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ﴾
    'ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது, அதன் மூலம் நீங்கள் தக்வா உடையோராகலாம்'. (அல்குர்ஆன் 2:184)    
13. அருள் செய்யப்பட்ட மாதம்.
 قَدْ جَاءَكُمْ شَهْرُ مُبَارَكٌ .....
    'அருள் செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது....' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: அஹ்மது, நஸயீ, பைஹக்கீ)   
முடிவுரை
மறுமையின் நிரந்தர சொர்க்கத்தை அடைந்து கொள்ள, அல்லாஹ்வின் அருள் நிறைந்த ரமளான் மாதத்தை, நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நாம் விளங்கிக் கொள்வோமாக!
இந்தப் பக்கத்தை நண்பர்களுக்கு அனுப்ப இங்கே கி